300 சவரன் தங்க நகை அபேஸ்.. தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கேரளாவில் வியாபாரி ஒருவர் வீட்டில் 300 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வளப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப். அரிசி வியாபாரியான இவர் மதுரையில் உள்ள தனது நண்பரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 19-ஆம் தேதி குடும்பத்துடன் சென்றுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 300 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
இச்சம்பவம் தொடர்பாக அஷ்ரப், காவல் நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது மூன்று பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோன்று, சமீபத்தில் கேரளாவில் நகைக்கடை உரிமையாளரிடம் 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. அதாவது, நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தனது நகைக்கடையை மூடிவிட்டு சகோதருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த 3.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட மலப்புரத்தைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் தங்கம் இல்லாததால் தலைமறைவானவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அண்மை காலமாக கேரளாவில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து, அரசு பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
What's Your Reaction?