டெங்கு பாதிப்பால் பரபரப்பான கடலூர்.. ஒரே நாளில் 11 பேர் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி
தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், கடலூரில் ஒரே நாளில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு கொசுவினால் ஏற்படும் காய்ச்சலை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று கடலூர் மாவட்டத்தில் 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அதில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 78 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரே நாளில் 5 ஆண்கள், 6 பெண்கள் என 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெங்கு உறுதி செய்யப்பட்ட 11 பேருக்கும், கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு பாதிக்கப்பட்ட அனைவர்களின் உடல்நலனில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ள 67 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களும் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 11 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், கடலூர் மாவட்ட சுகாதார அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொசுவினால் பரவும் நோய்கள், தடுக்கும் வழிமுறைகள், குளோரினேஷன் ஆய்வு உள்ளிட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
What's Your Reaction?