திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை.. கொள்ளையன் யார்? போலீசார் திணறல்..
திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வந்த நிலையில், ஆதார் மூலம் அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வரும் நிலையில், கொள்ளை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவரின் கைரேகைகளை வைத்து ஆதார் பட்டியல் மூலம் தேட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் கடந்த 15ஆம் தேதி எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி சம்பவம் நிகழ்ந்தது. இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை சிசிடிவி காட்சி உதவியோடு திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.
பாரிமுனை பகுதியில் சுற்றித்திரிந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கொள்ளையன் காது கேட்காத, வாய் பேச முடியாதவர் என்பது தெரிந்தது. போலீசார் அவருக்கு ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 மணி நேரம் கொள்ளையனுக்கு குரல் பரிசோதனை நடந்தது.
குரல் பரிசோதனையில் அவர் உண்மையில் பேச இயலாதவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, கொள்ளையனை எழும்பூர் நீதிமன்ற ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர் தற்போது கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொள்ளையன் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் பாண்டிச்சேரியில் கொள்ளை சம்பவத்தில் அவர் ஈடுபட்டது, தற்போது திருவல்லிக்கேணி போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து பாண்டிச்சேரி போலீசார் திருவல்லிக்கேணி போலீசாரை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்துள்ளனர். நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள செல்போன் கடையில் கொள்ளை சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். அதில் பணம், செல்போன், லேப்டாப்பை திருடிச் சென்று விட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் யார் என்ற விவரங்கள் தெரியாததால் கைரேகை உள்ளிட்டவற்றை வைத்து ஆதார் தேடல் மூலம் கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்துள்ளதனர்.
பதிவு செய்யப்பட்ட கைரேகையை பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஆதார் பிராந்திய அலுவலகத்திற்கு அனுப்ப திருவல்லிக்கேணி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான சட்ட நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?