'தோனியை மன்னிக்க மாட்டேன்'.. யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசம்.. பாயும் ரசிகர்கள்!

''2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஏன் தோற்றது? நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். யுவராஜ் சிங் ஐசிசியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் யுவராஜ் சிங் மீது பொறாமை கொண்ட தோனி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை'' என்று யோகராஜ் சிங் கூறியுள்ளார்.

Sep 2, 2024 - 17:05
Sep 3, 2024 - 10:24
 0
'தோனியை மன்னிக்க மாட்டேன்'.. யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசம்.. பாயும் ரசிகர்கள்!
Dhoni And Yograj Singh

டெல்லி: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அழிக்க முடியாத இடம் பிடித்தவர் மகேந்திர சிங் தோனி. 'கூல் கேப்டன்' என்று அழைக்கப்பட்ட தோனி, இந்திய அணிக்காக பெரும் சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணிக்காக 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற ஒரே கேப்டன் தோனிதான். 

இந்த இரண்டு உலகக்கோப்பைகளையும் கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 148 ரன்கள் குவித்த யுவராஜ் சிங், 2 அதிரடி அரைசதமும் விளாசினார். அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசியது என்றென்றும் நினைவு கூறப்படும். 

இதேபோல் 2011 ஓடிஐ உலகக்கோப்பை தொடரிலும் கலக்கிய யுவராஜ் சிங், 362 ரன்கள் அடித்தது மட்டுமின்றி 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் யுவராஜ் சிங் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவருக்கு அணியில் பெரிதாக இடம் கிடைக்கவில்லை. அப்போது கேப்டனாக இருந்த தோனி தனக்கு பிடித்த வீரர்களை மட்டும் அணியில் வைத்து, மூத்த வீரர்களை ஓரம்கட்டி விட்டதாக இன்றளவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

யுவராஜ் சிங் நல்ல ஃபார்மில் இருந்தபோதும் ஈகோ காரணமாக அவருக்கு வாய்பளிக்காமல் திறமையை தோனி வீணடித்து விட்டார் என்று யுவராஜ் சிங் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தோனியை வாழ்நாள் முழுவதும் மன்னிக்க மாட்டேன் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், ''தோனி எனது மகன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை அழித்து விட்டார். என் வாழ்நாள் முழுவதும் அவரை நான் மன்னிக்க மாட்டேன். தோனி மிகப்பெரும் கிரிக்கெட் வீரர். ஆனால் அவர் எனது மகனுக்கு எதிராக செயல்பட்டார். தோனி தனது முகத்தை கண்டிப்பாக கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

எனக்கு எதிராக, எனது குடும்பத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்களை நான் மறக்க மாட்டேன். 
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஏன் தோற்றது? நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். யுவராஜ் சிங் ஐசிசியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் யுவராஜ் சிங் மீது பொறாமை கொண்ட தோனி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகத்தான் 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது'' என்று கூறியுள்ளார்.

யோகராஜ் சிங்கின் கருத்தை யுவராஜ் சிங் ரசிகர்கள் வரவேற்றுள்ள நிலையில், தோனி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ''யுவராஜ் சிங் சிறப்பாக விளையாட தோனி தான் முக்கிய காரணம். அதன்பிறகு யுவராஜ் சிங் சரிவர செயல்படாததால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழுவினரே அவரை அணியில் எடுக்கவில்லை'' என்று தோனி ரசிகர்கள் கூறியுள்ளனர்.

தோனி மீது பரபரப்பு குற்றம்சாட்டிய யோகராஜ் சிங் நடிகரும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆவார். இவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 6 ஓடிஐ போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow