சுகாதாரத்துறைக்கு விளக்கமளிக்காமல் ஜப்பானில் உலா வரும் இர்ஃபான்..!
ஜப்பானில் உலா வரும் இர்ஃபான் தொடர்ந்து தனது யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபரான இர்ஃபான் பல்வேறு உயர்தர உணவகங்களுக்கு சென்று அதன் உணவுகளை ரிவியூ (Review) செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து, பிரபலங்களையும் பேட்டி எடுத்து வருகிறார். இவ்வாறு யூடியூபில் வீடியோ பதிவிடுவதில் பிசியாக உள்ள இர்ஃபான் சமீபகாலமாக சர்ச்சை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அண்மையில் இர்ஃபானின் மனைவி ஆசிபா கருவுற்றிருந்தார். அப்போது துபாயில் சென்று தனது குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்ட இர்ஃபான் இதுதொடர்பான வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இச்சம்பவம் பூதாகரமாக வெடித்தது.
இந்தியாவில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவது பாலின தேர்வு தடைச்சட்டம் 1994-இன் படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில வெளிநாடுகளில் குழந்தையின் பாலினத்தை அறிவதில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில், பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இர்ஃபான் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரனைச் சந்தித்து விளக்கம் அளித்து, மன்னிப்பு கேட்டார். ஒரு வழியாக இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில், இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
அதாவது , தனது மனைவி ஆசிபாவை பிரசவத்திற்காக சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த இர்ஃபான் குழந்தையின் தொப்புள் கொடியை தானே கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இச்செயல் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் படி தவறு என்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்களே இந்த செயல்களில் ஈடுபட வேண்டும் என்று பலரும் கருத்துகளை வெளியிட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்ததையடுத்து இதற்கு விளக்கம் கேட்டு இர்ஃபான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இச்சம்பவம் தொடர்பாக இர்ஃபானுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சுகாதாரத்துறைக்கு இர்ஃபான் கடிதம் அனுப்பினார். மன்னிப்பு கேட்டாலும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதையெல்லாம் கண்டுகொள்ளாத யூடியூபர் இர்ஃபான், நடிகர் நெப்போலியன் திருமண விழாவிற்காக ஜப்பான் சென்றிருந்தார். தொடர்ந்து, அங்குள்ள உணவகங்களில் சென்று உணவருந்தியவாறு தொடர்ந்து தனது யூடியூப் சேனலுக்கு அடுத்தடுத்த வீடியோவை பதிவிட்டு வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சுகாதாரத்துறை என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
What's Your Reaction?