ஐ.பி.எல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த இளம் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை அந்த அணி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல் 2025 கிரிக்கெட் தொடர் வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை அந்த அணி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அறிமுக வீடியோவில் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தில் காணப்படுகிறார்.
வைபவ் சூர்யவன்ஷி அணியில் இணைந்தது குறித்து நேர்காணல் ஒன்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியதாவது, "வைபவ் மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். மைதானத்தில் அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார். அவரது பலத்தை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாகவும், அவருடன் ஒரு சகோதரர் போல் இருக்க வேண்டும்.
அவர் பங்களிப்பை வழங்க தயாராக காணப்படுகிறார். அவரை சிறப்பாக வைத்துக் கொள்வதே முக்கியமானது. டிரெசிங் ரூமில் நல்ல எண்ணோட்டம் நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும். வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். தற்போது அவர் ஐ.பி.எல்-இல் விளையாட தயாராக இருக்கிறார் என்றே நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மூன்று வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவரின் கிரிக்கெட் ஆர்வத்தை பார்த்த அவரது தந்தை சவ்ஜீவ் சூர்யவன்ஷி தனது இடத்தை விற்று மகனுக்கு கிரிக்கெட் விளையாட நிதியளித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்றுள்ளார். இவர் தனது 12 வயதில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் மிகச்சிறிய வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை பெற்றார்.
தொடர்ந்து, சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 62 பந்துகளில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், இளம் வயதில் சதமடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.
அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் 13 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷிக்கு 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுப்பது தொடர்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக ராஜஸ்தான் அணி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தி எடுத்து தன்வசப்படுத்தியது.
What's Your Reaction?






