பல வருட கனவு நிறைவேறியது.. குகேஷிற்கு உற்சாக வரவேற்பு
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷிற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரனுடன் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் மோதினார். 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் முதலில் யார் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்களே சாம்பியன் என்ற பட்டத்தை வெல்வர் என்ற விதிகளுடன் போட்டி தொடங்கியது. இதில், குகேஷ் மற்றும் டிங் லிரனுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இருவரும் ஆறரை புள்ளிகள் பெற்ற நிலையில், 14-வது சுற்றில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற பரபரப்புடன் போட்டி நடைபெற்றது. இதில் 18 வயதான குகேஷ் முதலில் தனது சாதுர்யமான நகர்வால் முதலில் ஏழரை புள்ளிகளை பெற்று டிங் லிரனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையும் படைத்தார். வெற்றி பெற்ற குகேஷுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோன்று தமிழக அரசும் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்தது.
இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பியுள்ள வீரர் குகேஷிற்கு சென்னை விமான நிலையத்தில் எஸ்.டி.ஏ.டி (SDAD) சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் குகேஷ் பேசியதாவது, இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல வருடமாக இது என்னுடைய கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது. எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
செஸ் சாம்பியன் குகேஷிற்கு நாளை சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பல செஸ் நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.
What's Your Reaction?