15 பவுன் நகை அபேஸ்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி... மாஸ்டர் பிளான் போட்டவருக்கு கைவிலங்கு!
ராஜபாளையத்தில் மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் கொலையாளி குறித்த சிசிடிவி காட்சிகள்வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் 84 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜீவரத்தினம். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 3 பிள்ளைகளும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஜீவரத்தினத்தின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி மூதாட்டி ஜீவரத்தினத்தின் வீடு திறந்திருந்தும் பல மணி நேரமாக அவர் வெளியே வராமல் இருந்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மூதாட்டியின் உறவினர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். வயது மூப்பு காரணமாக வீட்டில் தடுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என நினைத்து மூதாட்டியின் ஈமச்சடங்கிற்காக அவரது உறவினர்கள் தயார் செய்துள்ளனர்.
அந்த சமயம், மூதாட்டியை குளிக்க வைக்கும் பொழுது அவர் அணிந்திருந்த மூன்று தங்க செயின்கள், இரண்டு தங்க வளையல்கள், இரண்டு மோதிரங்கள் மற்றும் இரு காதுகளிலும் அணிந்து இருந்த கம்மல் உட்பட சுமார் 15 பவுன் தங்க நகைகள் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் மூதாட்டியின் கழுத்து நெறிக்கப்பட்டது போன்ற ரத்த காயத்துடன் கூடிய தழும்புகள், கை மற்றும் கால்களில் காயம் ஆகியவற்றைக் கண்ட உறவினர்கள் இதுகுறித்து உடனடியாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டி ஜீவரத்தினம் நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி இருவர் மூதாட்டியின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து சென்றது பதிவாகி இருந்தது. விசாரணையில் மூதாட்டியின் வீட்டிற்கு வந்து சென்ற நபர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மதன் மற்றும் முத்துக்குமார் என்பது தெரியவந்தது. பின்பு அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் ராஜபாளையம் மதுரைவீரன் காலனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மூதாட்டியின் வீட்டை நோட்டமிட்டு இருவருக்கும் தகவல் கொடுத்ததும், மூதாட்டி ஜீவரத்தினத்தை கொலை செய்து கொள்ளையடிப்பதற்கு மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ரமேஷை கைது செய்த காவல்துறையினர் 35 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் இதுபோன்று வேறு ஏதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆள் நடமாட்டம் மற்றும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் திருவள்ளுவர் நகர் பகுதியில் பட்டப் பகலில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?