ஜாகிர் உசேன் மறைவு.. ஈடுசெய்ய முடியாத இழப்பு.. ரசிகர்கள் கவலை
தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உலக புகழ் பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் பிரபல இசைக்கலைஞர் அல்லா ரக்காவின் மகனாவார். இவரது தந்தை மூன்று வயது முதலே ஜாகிர் உசேனுக்கு தபேலா கற்பித்தார். இதையடுத்து ஜாகிர் தனது ஐந்து வயது முதலே தபேலா வாசிக்க தொடங்கினார். தனது 11 வயதில் இசை பணம் மேற்கொள்ள தொடங்கிய இவர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
1973-ல் வெளிவந்த இவரது முதல் இசை ஆல்பமான ‘லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்டு’ பெரும் வரவேற்பை பெற்றது. ஜாகிர் உசேன் உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுடன் இணைந்து பல இசைக்குழுக்களை நிறுவி உள்ளார். இவர் இசையமைத்து நடித்த ‘வானப்பிரஸ்தம்’ திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்தது. மேலும், இவர் ‘இன் கஸ்டடி’, ‘தி மிஸ்டிக் மஸார்’ உட்பட பல திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கு தனியாகவும், பல்வேறு இசைக் குழுவினருடன் இணைந்தும் இசையமைத்துள்ளார். ஜாகிர் உசேன், கிராமி விருது, பத்மவிபூஷன், சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஜாகிர் உசேன் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த இரண்டு வாரங்களாக நுரையீரல் பிரச்சனையின் காரணமாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் ஜாகிர் உசேன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து, அவரது உடல் மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திமுக எம்.பி.கனிமொழி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்திய இசையை உலக அரங்கில் ஒலிக்கச் செய்தவர்களில் முக்கியமானவர். பல இளம் தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் . 4 முறை கிராமி விருதுகள், பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய அங்கீகாரங்களுடன் தனது இசைப் பயணத்தை தொடர்ந்த அவரது மறைவு, இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ஜாகிர் உசேன் சீக்கிரம் சென்றுவிட்டார், எனினும் அவர் தனது கலையின் மூலம் விட்டு சென்றவை மற்றும் அவர் நமக்கு கொடுத்த பொன்னான காலத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?