கோவில் கருவறைக்குள் இருந்து இளையராஜா வெளியேற்றம்.. ஜீயர்கள் செயலால் வெடித்த சர்ச்சை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. 1976-ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் 45 ஆண்டுகளாக தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். 80-ஸ், 90-ஸ் கிட்ஸுகளாக இருந்தாலும் சரி 2கே (2K) கிட்ஸுகளாக இருந்தாலும் சரி அனைவரும் சோகம் என்றாலே இளையராஜா இசையில் மூழ்கி விட ஆரம்பித்துவிடுவார்கள். இளையராஜாவுடன் ஒரு படத்திலாவது இணைந்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் பல இயக்குநர்கள் ஏக்கத்துடன் வலம் வருகின்றனர்.
80 வயதானாலும் இசைத்துறையில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக இளையராஜா உலா வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ இரண்டாம் பாகத்திற்கு இவர் தற்போது இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை போன்று அல்லாமல் இரண்டாம் பாகம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழு கூறியதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான 'திவ்ய பாசுரம்' நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவருக்கு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டாள் கோவில் நிர்வாகம் வரவேற்பு அளித்தது.
தொடர்ந்து, இளையராஜா, பெரிய பெருமாள் சன்னதி, நந்தவனம், ஆண்டாள் சன்னதி ஆகியவற்றிற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவில் கருவறைக்குள் இளையராஜா செல்ல முயன்றார். அப்போது, ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் என்று அழைக்கப்படும் சடகோப ராமானுஜ ஐயர், ஆண்டாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானு ஜீயர் ஆகியோர்களும் கருவறைக்குள் செல்ல முயன்றதால் இளையராஜாவை அங்குள்ள ஜீயர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சற்று யோசித்த இளையராஜா சாமி இருக்கும் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பரிவட்டங்கள் கட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கோவில் கருவறைக்குள் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?