ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்...!
தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்( 26). இவர் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அவ்வப்போது கேட்டரிங் தொடர்பான வேலை செய்து வந்துள்ளார். இவரது தந்தை தேவராஜ் கிரி கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில், தாய் மற்றும் அண்ணனுடன் வசித்து வந்துள்ளார். இவர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆகாஷ் தாயார் மோதேதி மார்பக புற்றுநோயால் பாதிகப்பட்டு 4 ஸ்டேஜில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பழக்கமாக கொண்ட ஆகாஷ் நேற்று தாயின் சிகிச்சை செலவுக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் அவரது தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் ஆகாஷை கடிந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் அவரது தாய் நேற்று கடுமையாக திட்டியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் ஆகாஷை காணாததால் அவரது தாயும், அண்ணனும் தேடி வந்துள்ளனர். இரவும் காணாததால் ஆகாஷின், அண்ணன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் டிவி கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் அடிப்படையில், சடலத்தை மீட்ட கோட்டூர்புரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. பல்வேறு தரப்பினர் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என தொடர் போராட்டமும், சட்டப் போராட்டமும் நடத்தி வருகின்றனர். ஆனாலும் இன்னமும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆகாஷின் தாய்., "26 ஆண்டுகளாக பத்திரமாக வளர்த்து வந்த பிள்ளை தற்போது உயிரிழந்துள்ளார். தனக்கு சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இறந்ததால் பெரும் மன உளைச்சலில் இருந்தார். இன்னும் இந்த ஆன்லைன் ரம்மி பல உயிர்களை காவு வாங்குவதற்கு முன் அதை தடை செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும், "ஆன்லைன் ரம்மியால் நிறைய உயிரிழப்புகள் தொடர்பான செய்தி வரும் போது கடந்து போய் விடுகிறோம். ஆனால், அது நமது குடும்பத்தில் நடக்கும் போது தான் எவ்வளவு கொடுமை என அறிகிறோம். அடுத்த உயிரிழப்பு நடப்பதற்கு முன்பாக அரசு அதனை தடுத்து நிறுத்த வேண்டும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
What's Your Reaction?