Mazhai Pidikatha Manithan Movie Director Vijay Milton : இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, இப்போது ஹீரோவாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஆரம்பத்தில் நான், சலீம், பிச்சைக்காரன் என ஹிட் மேல் ஹிட் கொடுத்த விஜய் ஆண்டனி, தற்போது தடுமாறி வருகிறார். இன்னொரு பக்கம் இயக்குநராகவும் விஜய் ஆண்டனி தனது பயணத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனியுடன் மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம், ஆக்ஷன் ப்ளஸ் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தனது மனைவியை கொலை செய்தவர்களை பழிவாங்கும் கேரக்டரில் விஜய் ஆண்டனி நடித்துள்ளதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஆக்ஷன் காட்சிகளை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக எடுத்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கதையின் பின்னணி சூப்பராக இருந்தாலும் படம் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், மழை பிடிக்காத மனிதன் இயக்குநர் விஜய் மில்டன் ஒரு வீடியோ வெளியிட்டு திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அதாவது, இப்படத்தில் விஜய் ஆண்டனியின் கேரக்டரை ரொம்பவே சர்ப்ரைஸ்ஸாக வைத்திருந்தேன். படம் தொடங்கியதும் விஜய் ஆண்டனி யார், அவருக்கு ஏன் அடிப்பட்டுள்ளது என்பதெல்லாம் சீக்ரெட்டான ஒன்று. ஆனால், இன்று வெளியாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தில், முதலில் வரும் ஒரு நிமிட காட்சியை நான் எடுக்கவே இல்லை. அந்த காட்சி எனது அனுமதி இல்லாமல், எனக்கே தெரியாமல் வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலில் வரும் அந்த ஒரு நிமிட காட்சியில், விஜய் ஆண்டனி குறித்த அனைத்து சர்ப்ரைஸ்களும் தெரிந்துவிடும். இப்படிப் பார்த்தால் ரசிகர்களுக்கு எப்படி சுவாரஸ்யமாக இருக்கும் எனவும், எனது அனுமதி இல்லாமலே இந்த காட்சியை படத்தில் வைத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் பேசியுள்ளார். விஜய் மில்டனின் இந்த வீடியோவை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், அந்த ஒரு நிமிட காட்சியை விஜய் ஆண்டனி தான் வைத்திருப்பாரோ என ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய் ஆண்டனி தற்போது டைரக்ஷன், எடிட்டிங் என அனைத்து ஏரியாவிலும் இறங்கி அடிக்கிறார்.
மேலும் படிக்க - மகாராஜா இயக்குநர் நித்திலனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
இதனால் அவரே தனக்கு விருப்பமான சில காட்சிகளை இப்படத்தில் இணைத்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இயக்குநர் ஆண்டனியின் அனுமதி இல்லாமல் விஜய் ஆண்டனி இப்படி செய்திருக்கக் கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு எதிர்பார்த்தளவில் வரவேற்பு இல்லை. இந்த நிலையில் தற்போது விஜய் மில்டனும் இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது மழை பிடிக்காத மனிதன் படத்துக்கு ப்ரோமோஷனாக இருக்குமா அல்லது இன்னும் மரண அடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.