உலக செஸ் சாம்பியன் குகேஷிற்கு விலையுயர்ந்த பரிசளித்த சிவகார்த்திகேயன்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றை வழங்கினார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் மோதினார். 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் முதலில் யார் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்களே சாம்பியன் என்ற பட்டத்தை வெல்வர் என்ற விதிகளுடன் போட்டி தொடங்கியது. இதில், குகேஷ் மற்றும் டிங் லிரனுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
14-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் தனது சாதுர்யமான நகர்வால் முதலில் ஏழரை புள்ளிகளை பெற்று டிங் லிரனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.மேலும், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையும் படைத்தார். வெற்றி பெற்ற குகேஷுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் குகேஷிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் வழங்கப்பட்டது. விழாவில், உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் போது, தமிழ்நாட்டில் திறமையான செஸ் வீரர்-வீராங்கனைகளை உருவாக்க, அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென ‘Home of chess' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை முண்ணனி நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவருடன் கேக் வெட்டி மகிழ்ந்த நிலையில் குகேஷிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பில் குகேஷின் பெற்றோரும் உடனிருந்தனர்.
What's Your Reaction?