இனி ஊராட்சித் தோறும் மகளிர் சுய உதவிக்குழு ஆய்வு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களை பெற முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Mar 6, 2025 - 16:49
 0
இனி ஊராட்சித் தோறும் மகளிர் சுய உதவிக்குழு ஆய்வு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
Udhayanidhi stalin inspection

திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் கறவை மாடுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மகளிரின் நலனுக்காக தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.பேட்டியின் விவரங்கள் பின்வருமாறு-

”பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவும், அவர்கள் பொருளாதார ரீதியாக தனித்து இயங்கவும், அவர்கள் சுயமரியாதையுடன் வாழவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் 1989-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக மகளிர் சுயஉதவிக் குழு என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது, அவர்களுக்கு (skilled based programming) திறன் பயிற்சி அளிப்பது, சுய தொழில்  தொடங்க ஊக்குவிப்பது என நம்முடைய இன்றைய முதலமைச்சர் அவர்கள் அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தபோது, பல்வேறு முன்னேற்றங்களை அந்தத் துறையில் செயல்படுத்தி, அதனடிப்படையில் தற்போது  கிராமப்புறங்களில் 3.30 இலட்சம் குழுக்களும், நகர்ப்புறத்தில் 1.50 இலட்சம் குழுக்களும், என மொத்தம் 4 இலட்சத்து 80 ஆயிரம் குழுக்கள் தற்போது நடைமுறையில் (active) இருக்கிறார்கள்.”

மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடு ஆய்வு:

”இக்குழுக்களில் 54 இலட்சம் மகளிர் உறுப்பினர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 1 இலட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிக் கடன் இணைப்பாக நாங்கள் பெற்றுத் தந்துள்ளோம்.

வருகின்ற 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று சென்னையில், நம்முடைய  முதலமைச்சர் அவர்கள் 3,019 கோடி ரூபாய் கடன் இணைப்புகளை வழங்கவுள்ளார்கள். இப்படி வழங்கப்படுகின்ற அந்த கடன்களை எந்த அளவுக்கு பயனுள்ள வகையில் செலவிடுகின்றார்கள்; அதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களை பெற முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். மாவட்ட வாரியாக செல்கின்றபோது, ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடத்தும்போது, ஆயிரக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த சகோதரிகள் வருகிறார்கள். வங்கி இணைப்புக் கடன்கள் கோடிக்கணக்கில் வழங்குகிறோம். ஆனால் இனிமேல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு, கிராமத்திற்கு, ஊராட்சிக்கு செல்லும்போது அங்கு செயல்படக்கூடிய சுயஉதவிக் குழுவில் உள்ள சகோதரிகளை அழைத்து, அவர்கள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள்; என்னென்ன திறன் பயிற்சி எதிர்பார்க்கிறார்கள்; என்னென்ன வசதிகள் கேட்கிறார்கள். செயல்பட்டுக் கொண்டிருந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஏன் செயல்படாமல் உள்ளது. அந்த குழுக்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்துவது. அவர்களை எப்படி ஊக்குவிப்பது; அவர்களுடைய பிரச்சனைகள் என்னவென்று கேட்கச் சொன்னார்கள்.

அதனுடைய ஒரு முன்னோட்டமாக தான் இன்றைக்கு முதன்முறையாக ஊராட்சி அளவில் இயங்கக்கூடிய குழுக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பணியை திருவாரூரில் இருந்து துவங்கியிருக்கின்றோம். இந்த குழுக்களை துவக்கிய கலைஞர் அவர்களது சொந்த ஊரில் இருந்து ஆய்வைத் துவங்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, பெருமை” எனத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு

Tejasvi Surya: பாடகியினை கரம் பிடித்தார் கர்நாடகா பாஜக எம்பி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow