இளம்பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள்.. இறுதியில் வெளிவந்த உண்மை
மும்பையில் இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தற்போது மர்ம நபர்கள் சிலர் குறிப்பிட்ட ஒரு தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொள்கின்றனர். பின்னர், அந்த தொலைபேசி எண்ணின் உரிமையாளரிடம் நீங்கள் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ளீர்கள் என்றோ பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளீர்கள் என்றோ கூறி தங்களுக்கு தேவையான தொகையை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்ப சொல்லி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற பிரச்சனைகளை சாதாரண மக்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற, அழைப்புகள் வந்தால் காவல்துறையினரிடம் புகாரளிக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படியான ஒரு சம்பவம் மும்பையில் தற்போது அரங்கேறியுள்ளது. 26 வயதான இளம்பெண் ஒருவர் மருந்து நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வருகிறார். இவரது தொலைபேசி எண்ணிற்கு திடீரென தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. தெலைபேசியின் மறுமுனையில் பேசியவர் தன்னை டெல்லி போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் அப்பெண்ணிடம் நீங்கள் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட 8 வங்கிகளிடமிருந்து, ஐந்தாயிரத்து 716 கோடி ரூபாய் கடன் பெற்று சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்பெண்ணிற்கு தொடர்பு இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இளம்பெண்ணை கைது செய்வதாக கூறிய அந்த மர்ம நபர்கள், விசாரணை மேற்கொள்ள ஓட்டல் ஒன்றை புக் செய்யுமாறு கூறியுள்ளனர். மேலும், அப்பெண்ணின் வங்கிக் கணக்கை சரிபார்க்க ஒரு லட்சத்து 78 ஆயிரத்தை தாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அப்பெண், அந்த மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?