"ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழிப்போம்" - சென்னை உயர்நீதிமன்றம்

இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Jan 24, 2025 - 14:37
Jan 24, 2025 - 14:42
 0

இரும்பை முதல் முறையாக  பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என  பெருமைப்படும் நேரத்தில்,  ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து  உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, விசாரணைக் கைதியாக புழல் சிறையில் உள்ள போலீஸ் பக்ரூதின் சார்பில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.நதியா, சிறை அறையில் உள்ள கேமராக்களை ஆஃப் செய்து விட்டு, போலீஸ் பக்ரூதின் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், புழல் சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் மூடப்பட்டதை எதிர்த்து  வழக்கு தொடர்ந்தததற்காக அவர் தற்போது பழிவாங்கப்படுவதாக கூறினார்.  சிறை நிர்வாகம் சார்பில், போலீஸ் பக்ரூதின் தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை எனவும் அவருக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறினார். 
 
இதனையடுத்து, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளே தவறிழைப்பவர்களாக மாறி விடக்கூடாது என தெரிவித்த நீதிபதிகள், குற்றவாளியாக இருந்தாலும் கூட, அவர்களை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டுமென அறிவுறுத்தினர். சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை, ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

இரும்பை முதன்முதலாக பயன்படுத்தி இரும்பு காலத்தின்  முன்னோடி  என்று பெருமைப்படும் நேரத்தில்,  ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழித்து  உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, இன்று பிற்பகல் 2.15 மணிக்கு போலீஸ் பக்ரூதினை காணொலி மூலம் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow