சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை ரவுடியான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, சிடி மணி உட்பட மொத்தம் 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 25 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களை மாறி மாறி காவலில் எடுத்து, செம்பியம் தனிப்படைப் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி திருவேங்கடம் ஜூலை 14ஆம் தேதியும், ரவுடி சீசிங் ராஜா, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியும், போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட ரவுடி சம்போ செந்தில், பாம் சரவணன், மற்றும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக சென்னை தனிப்படை போலீசார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் போலீசார், அக்டோபர் 03ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில், கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலையும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். 3வது குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் மகனும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை சேர்த்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ட்டுள்ள குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியாகி உள்ளது. அதில் கைதானவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் பதியப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி ஜெயபாலையும், ஆம்ஸ்ட்ராங்கையும் ஒரே சமயத்தில் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாக கைதான ரவுடி பொன்னை பாலு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொலை செய்வதற்காக வீடு வாடகைக்கு எடுத்து ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷின் நினைவு நாளுக்கு முன்பாக ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டமிட்டதாகவும், ஆற்காடு சுரேஷை கொன்ற பிறகு தன்னையும் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் ரோடு ரோடாக உயிருக்கு பயந்து சுற்றியதாகவும் கைதான பொன்னை பாலுவின் ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல கைதான மற்றவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றவை குறித்தும் பட்டிலிடப்பட்டு உள்ளது.