உதயநிதி கருணாநிதி பேரன் என்பதில் எங்களுக்கும் சந்தேகம் இல்லை - முன்னாள் அமைச்சர் பதிலடி
உதயநிதி கருணாநிதி பேரன் என்பதில் உங்களுக்கு வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம், எங்களுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘நான் சொல்லாலதை பொய்யாக திருத்தி இந்தியாவில் பல நீதிமன்றத்தில் என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். நான் சொன்னா சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்றார்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் திருவேடகம் தென்கரை மன்னாடிமங்கலம் குருவித்துறை பாலகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கிய பின்பு கலந்தாய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் தேங்காத சாலைகளே இல்லை. இதை சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்று கேட்டால் அனுமதிப்பதில்லை.
உதயநிதி சொல்கிறார், நான் கருணாநிதி பேரன்; சொன்னதை வாபஸ் வாங்க மாட்டேன் என்று. நீங்கள் கருணாநிதி பேரன் என்பதில் உங்களுக்கு வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம் எங்களுக்கு இல்லை. திரும்பத் திரும்ப ஏன் இதை சொல்கிறீர்கள் என தெரியவில்லை.
ஏனென்றால், கருணாநிதி பேரன் என்பதால் தானே துணை முதலமைச்சர் ஆனீர்கள். இன்றைக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், இலவச சைக்கிள் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். யாரிடம் இந்த நாடகம் போடுகிறீர்கள்? உங்களின் ஆட்சிக்கு விரைவில் முடிவுகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. அதற்காக எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி மலரும்.
தாத்தா முதலமைச்சர், அப்பா அமைச்சர், இப்போது அவரது மகனான உதயநிதியும் அமைச்சர். முதல்வரின் மகனும் மருமகனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை, உங்களது அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார்.
அவர் பேசிய ஆடியோவை வெளியிட நீங்கள் தயாரா? இதுகுறித்து பேசினால் என் மீது வழக்கு போடுங்கள். வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். சபரீசனும், உதயநிதியும் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று உங்கள் அமைச்சரவையில் உள்ள அமைச்சரே சொல்கிறார். திராணி இருந்தால், அவர் சொன்ன வீடியோவை வெளியிட்டு இருக்கலாமே?
தற்போது தமிழகம் போதை பொருள்களின் கிடங்காக மாறி உள்ளது தினசரி 2000 கோடி 3000 கோடி ரூபாய் என்று போதை பொருள் வர்த்தகம் நடைபெறுகிறது. இளைஞர்களின் வாழ்வு சீர்குலைந்துள்ளது. ஆகையால் இந்த அரசை தூக்கி எறியும் காலம் வெகுதூரம் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி மலரும்” என்றார்.
What's Your Reaction?






