நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஓராண்டில் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக முதல் மாநாட்டை நடத்தியது, முக்கிய பிரச்சனைகளுக்கு கண்டனம் தெரிவித்தது, கூட்டணிகளில் கவனம் செலுத்துவது, களத்தில் மக்களை சந்தித்தது, 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தை கட்சிரீதியாக 120 மாவட்டங்களாக பிரித்தது என கட்சிப் பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையில், என்னதான் பார்த்து பாத்து பொறுமையாக அனைத்தையும் செய்துவந்தாலும், பல சர்ச்சைகள் தவெகவை சுற்றி நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. கட்சியின் பெயரை அறிவித்த அடுத்த நாளே, ஒற்றுப்பிழை இருப்பதாக கிளம்பிய சர்ச்சை, மாநாட்டில் கொள்கை தெளிவில்லாமல் விஜய் பேசியதாக எழுந்த விமர்சனம், வொர்க் ஃபரம் ஹோம் அரசியலை விஜய் செய்வதாக எழுந்த விமர்சனங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் நகரச் செயலாளர் பதவிக்கே 15 லட்சம் ரூபாய் கேட்பதாக எழுந்த பிரச்சனை, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற சமத்துவ கொள்கையை கொண்ட தவெகவில் சாதி பார்த்து பதவி கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டு என தவெகவும் சர்ச்சைகளும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தான் மீண்டும் ஒரு சர்ச்சையில் விஜய்யும், தவெகவும் சிக்கியிருக்கிறது.
த.வெ.க. 120 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞர் அணி, மகளிர் அணி என பல்வேறு அணிகள் அக்கட்சியில் உருவாக்கப்பட்டுள்ளன. கட்சிக் கொடியில் உள்ள 28 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் இந்த அணீகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தான் தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் இரண்டு நாள் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து த.வெ.க.-வில் உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்த அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியானது. த.வெ.க. சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத அந்த அறிக்கையில் இளம்பெண்கள் அணி, சிறார் அணி, திருநர் அணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணி, மீடியா அணி, உண்மை சரிபார்ப்பு அணி, உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.
திருநர்களுக்கான அணிக்கு ஒருபக்கம் வரவேற்பு வந்தாலும், மற்றொரு பக்கம் விஜய்யை விளாசி வருகின்றனர் திருநங்கைகள். அதாவது இணையத்தில் வெளியான அறிக்கையில் திருநர்கள் அணி ’9’வது இடத்தில் உள்ளதே இதற்கு காரணம்.
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி மூன்றாம் பாலினத்தவர்களுக்காக குரல் கொடுக்கும் திருநர் இயக்க செயற்பாட்டாளர் வித்யா த.வெ.க.-வை கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள் பக்கத்தில் லிவிங் ஸ்மைல் வித்யா விடுத்துள்ள பதிவில், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த “9” என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? என்று சாடியுள்ளார். மேலும், நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா! இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவுகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்! என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவை திமுக ஆதரவாளர்கள் அதிகளவில் பகிர்ந்து வரும் நிலையில், மறுபுறம் ஸ்மைல் வித்யாவை விஜய் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இணையத்தில் வெடித்திருக்கும் இந்த புதிய பிரச்சனைக்கு விஜய் பதிலளிப்பாரா அல்லது வழக்கம் போல் அமைதியாக கடந்து செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்......