அரசியல்

காலியாகும் அமமுக? கட்சித்தாவும் பெண் தலைகள்..! கேள்விக்குறியாகும் டிடிவி எதிர்காலம்?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து கூண்டோடு நிர்வாகிகள் வெளியேறி வருவதோடு, கட்சியின் முக்கிய தலைகளும் கட்சித் தாவும் படலத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கட்சித்தாவலில் ஈடுபடும் அந்த முக்கிய தலைகள் யார்? காலியாகிறதா அமமுக கூடாரம்? டிடிவியின் எதிர்காலம் என்னவாக போகிறது? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

காலியாகும் அமமுக? கட்சித்தாவும் பெண் தலைகள்..! கேள்விக்குறியாகும் டிடிவி எதிர்காலம்?
காலியாகும் அமமுக? கட்சித்தாவும் பெண் தலைகள்..! கேள்விக்குறியாகும் டிடிவி எதிர்காலம்?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுக ஆட்சியை காப்பாற்றுவதிலும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதிலும் மிக முக்கிய பங்கையாற்றியவர் டிடிவி தினகரன். ஒருகட்டத்தில் அதிமுகவில் அவருக்கு எதிரான சூழல் நிலவ, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 9 ஆண்டுகளாக அரசியல் களத்தில் பயணித்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. 

கட்சித் தொடங்கியதில் படு ஆக்டிவாக இருந்து வந்த கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அண்மைக் காலமாக சைலன்டாகவே இருந்து வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலை பாஜக கூட்டணியில் இருந்து சந்தித்த டிடிவி, தேனி தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். இந்த தேர்தலில் தன் சிஷ்யரான திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனிடம் தோல்வியைத் தழுவி இருந்தார் டிடிவி. அதன்பிறகு சைலண்ட் Mode-க்கு சென்ற டிடிவி கட்சியில் இருந்து, கூண்டாக நிர்வாகிகள் வெளியேறி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. 

சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மத்திய மாவட்ட மாநகர செயலாளர் பதவி வகித்த வழக்கறிஞர் பிரைட்டர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர், மற்றும் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து அக்கட்சியில் இருந்த விலகினார்.

இவரைத் தொடர்ந்து, தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாநகர பகுதியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பகுதி செயலாளர்கள், மற்றும் வட்ட செயலாளர்கள் அனைவரும், முன்னாள் மத்திய மாவட்ட மாநகர செயலாளர் பிரைட்டரின் ஆலோசனைக்கிணங்க அமமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதேபோல், தூத்துக்குடியில் உள்ள அமமுக பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், சுற்றுச் சூழல் அணிச் செயலாளர்கள், மகளிரணி செயலாளர்கள், மாணவரணி செயலாளர்கள், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் அகியோரும் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் டிடிவி கடும் அப்செட் ஆகி உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகிகள் ஆங்காங்கே கூண்டோடு வெளியேறுவதை தடுக்க  முடியாமல் திணறிவரும் டிடிவி தினகரனுக்கு, மேலும் ஷாக்கை கொடுக்கும் வகையில் கட்சியின் முக்கிய பெண் நிர்வாகிகள் வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி Panic அட்டாக்கை ஏற்படுத்தியுள்ளதாக் அமமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

அதாவது, ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்துக்கு தினகரன் வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதோடு, நிர்வாகிகள் அடையாறு வீட்டுக்குச் சென்றாலும் அவரின் உதவியாளர் ஜனா, டிடிவியை சந்திக்க விடாமல் தடுப்பதாக அமமுகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். 

அதேபோல, சில மாவட்டங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அங்கு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிடும் தினகரன், நிகழ்ச்சி செலவுகளுக்கான நிதியைக் கேட்டால் பதிலளிப்பதில்லை என்று அமமுகவினர் குமுறி வருகின்றனர். 

இருந்தாலும் கட்சியை நடத்தியாக வேண்டியதாயிற்றே என்று கடனை வாங்கி நிகழ்ச்சி நடத்த வேண்டிய நிலைக்கு மூத்த நிர்வாகிகளும் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாளுக்கு நாள் கைகளில் இருந்து காசு குறைந்து, கடன் வாங்கி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமமுகவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

குறிப்பாக, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெயபராஜ், சி.ஆர்.சரஸ்வதி அமமுகவில் இருந்து விலக முடிவெடுத்துவிட்டதாகவும், எங்கு சென்றால் எதிர்காலம் இருக்கும் என்று ஆலோசித்து வருவதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் அமமுக கூடாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, விரைவிலேயே அணி மாறும் படலம் அரங்கேறலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் தவெகவில் இணையவே அதிக வாய்ப்பு உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

ஒருகாலத்தில் அதிமுக ஆட்சியை தக்க வைக்க முக்கிய பங்கை ஆற்றிய டிடிவி, தற்போது தன் கட்சியை காப்பாற்றுவதில் திணறி வருவதாகவும், டிடிவியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.