விஜய் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்... நடிகை கவுதமி ‘பளீர்’ பதில்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகுதான், அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க முடியும் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகை கவுதமி பேசினார்.

நடிகை கவுதமி கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் பாஜகசார்பில் போட்டியிட அங்கு தங்கி பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். எனினும், அவருக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை.
பின்னர், கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரையும் மேற்கொண்டார். இந்நிலையில் கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக திரைப்பட நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அதிமுகவின் 53வது ஆண்டு விழா முன்னிட்டு, பூந்தமல்லி ஒன்றிய அதிமுக சார்பில் பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுறை மற்றும் நடிகை கௌதமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இதையடுத்து நடிகை கவுதமி கூட்டத்தில் கலந்து கொண்டபோது நேற்றைய தினம் அதிமுகவில் புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டதை அடுத்து, அதிமுக நிர்வாகிகள் அவருக்கு மேடையிலேயே வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கவுதமி, “திடீரென செல்போனில் அழைப்பு வந்து வாழ்த்து கூறினார்கள். மிகப்பெரிய பொறுப்பை கையில் ஒப்படைத்ததற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்திருக்கலாம். நினைவு வந்த காலத்திலிருந்து ஜெயலலிதா நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இளைஞர்கள் கையில் இளைஞர்கள் கையில் டாஸ்மாக்கும் போதை பொருளும் இருக்கிறது. எந்த திசையை திரும்பி பார்த்தாலும் இருட்டு தான் தெரிகிறது. படப்பிடிப்பின் போது பல முறை இந்த பகுதிக்கு வந்திருக்கிறேன் என்னை பலர் பார்த்திருக்கலாம். உங்களை சந்திக்க இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பாக்கியம் இருந்தால் ஒருவேளை உணவு உங்கள் வீட்டில் வந்து சாப்பிடுவேன்
ஆட்சியில் இருப்பவர்கள் சொந்தமான அதிகாரத்தை எடுத்துக் கொண்ட நிலையை பார்க்கிறோம். அது மிகப்பெரிய தவறு மிகப் பெரிய பாவம். அதிமுக ஆட்சியில் அனைத்து மதத்தினரும் அவர்கள் மத வழிபாட்டினை சந்தோஷமாக கொண்டாடினார்கள் இப்போது அப்படி சொல்ல முடியாது.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் பணிகளில் ஈடுபட, அரசியலுக்கு வர வேண்டிய தேவையும் உள்ளது. வரவேற்பும் உள்ளது. அவர் வந்த பிறகு அவர்கள் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும்” என பேசினார்.
முன்னதாக கூட்டம் முடித்துவிட்டு சென்ற நடிகை கௌதமியிடம் ஏராளமான பெண்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் மேலும் அங்கிருந்த குழந்தை ஒன்றை தூக்கி வைத்துக்கொண்டு கௌதமி புகைப்படம் எடுத்துக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
What's Your Reaction?






