Union Budget 2025: இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் முன்னேற்றத்துக்கான பட்ஜெட் இது!

Union Budget 2025: 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரது முன்னேற்றத்துக்கானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Feb 1, 2025 - 11:53
Feb 1, 2025 - 12:19
 0
Union Budget 2025: இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் முன்னேற்றத்துக்கான பட்ஜெட் இது!
மத்திய பட்ஜெட் 2025-2026

Union Budget 2025: பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ளதால், 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க் கட்சிகளின் அமளிகளையும் பொருட்படுத்தாமல் பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்படி, வளர்ச்சி, உள்கட்டமைப்பு, நடுத்தர வர்க்க நலன் உள்ளிட்டவற்றில் இந்த பட்ஜெட் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகக் கூறினார். அதேபோல், இளைஞர், ஏழை, பெண்கள், விவசாயிகள் முன்னேற்றத்துக்காக இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகள் பிரத்யேக வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் இது இருக்கும் எனவும் தெரிவித்தார்.

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருவதாகவும், நாட்டின் கடந்த 10 ஆண்டு கால உள்கட்டமைப்பை, உலகமே திரும்பிப் பார்ப்பதாகவும் பெருமையாக கூறினார். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் உருவாக்கப்படவுள்ளதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், தன் தன்யா கிருஷி திட்டம் - குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட 100 மாவட்டங்களை இலக்காக வைத்து செயல்படுவதாகவும், விவசாய உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே இலக்கு எனக் கூறினார். 

மேலும், 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பீகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகள் வளர்ச்சிக்காக புதிய திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையமாகக் கொண்ட கிராமப்புற செழிப்பு, மீள்தன்மை திட்டத்தை அரசு தொடங்க உள்ளதாகக் கூறினார். நகர்ப்புற மேம்பாடு, வரி விதிப்பு, கனிம வளம், நிதி மேலாண்மை, மின்சாரம், ஒழுங்குமுறை ஆகிய 6 துறைகளில் சீரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும், சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க புதிய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல், கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கும் கடன் நிதி, ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகள் பயன்பெற உள்ளனர். மேலும், இந்திய கடற்பரப்பில் மீன் வளத்தை அதிகரிக்க புதிய திட்டம், அசாம் மாநிலத்தில் புதிய உர உற்பத்தி மைய்யம் ஆகியவையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டில் வறுமையை முற்றிலும் ஒழிப்பது மத்திய அரசின் இலக்கு எனக் கூறிய அமைச்ச நிர்மலா சீதாராமன், சிறு குறு, நடுத்தர தொழிற்துறைகளுக்கு கடன் உத்தரவாத வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், கூடுதல் விளைச்சல் அளிக்கும் பருத்தி விதைகள் உற்பத்திக்காக தேசிய அளவில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு 5 லட்சம் பட்டியலின பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடி கடன் உதவி வழங்கப்படவுள்ளதாகவும், அசாமில் யூரியா உற்பத்தி ஆலை அமைத்து, அதில் ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow