பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் அரசு- திரெளபதி முர்மு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருவதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்க உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

Jan 31, 2025 - 12:14
 0
பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் அரசு- திரெளபதி முர்மு
நாடாளுமன்ற கூட்டத்தொடர்

நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று கூடியது. இதையடுத்து நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாவது அமர்வு மார்ச் 10 முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய அவர், அரசியல் சாசனத்தை உருவாக்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாகவும்,  புதிய திட்டங்கள் அதிவேகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், விவசாயிகளுக்கு உதவித் தொகையாக 41 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. 2 கோடியே 25 லட்சம் சொத்துரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு காப்பீடு விரிவு படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் கல்வி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாட்டில் 25 கோடி பேரை வருமையில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருகிறது. பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் தனது இலக்கை பூர்த்தி செய்து வருகிறது. ஏழைகளின் கனவை நனவாக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. ஜன் அஷவத் கேந்திரா திட்டம் மூலம் 80 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது.

நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற நமது இலக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் முத்ரா கடன் தொகை 20 லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனோவுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையிலேயே உள்ளதாகவும், தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும் கூறினார். நாட்டின்  மூலை முடுக்கெங்கிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் செயல்பாட்டில் உள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

செயற்கை நுண்ணற்வு துறையின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளை போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில்  நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கிரண் ரிஜிஜூ, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் டி.ஆர்.பாலு - திருச்சி சிவா, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்றனர்.  நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow