கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவம்.. தெப்பத் திருவிழா கோலாகலம்
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழாவின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இதையடுத்து நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலையில் அருள்மிகு கந்தசுவாமி பெருமான் வீதியுலா வரும் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் படி 9-ஆம் நாளான நேற்று மாலை சரவண பொய்கை குளத்தில் கந்தசாமி பெருமான் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து 15-ஆம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த 9-ஆம் தேதி கந்தசுவாமி கோயிலின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. காலை ஏழு மணியளவில் உற்சவர் கந்தனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில், கோயிலிலிருந்து தேரடிக்கு `அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் புறப்பட்டார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் கந்தபெருமான் எழுந்தருளிய நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரானது நான்கு மாட வீதிகள் வழியாக சென்று பிற்பகல 3:00 மணியளவில் தேரடிக்கு வந்தது. தேர் உற்சவத்தை ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், பழரசங்கள் வழங்கப்பட்டன.
Read more:-
கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய மாசி தேரோட்டம்.. திரளாக குவிந்த பக்தர்கள்
What's Your Reaction?






