அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்... குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. முழுவிவரம் இதோ..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஷிற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Nov 15, 2024 - 05:34
 0
அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்... குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. முழுவிவரம் இதோ..!
அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்... குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  

காலை 10:30 மணியளவில் முதல் தளத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவ துறை தலைவர் மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் சென்று சந்தித்துள்ளார்.  திடீரென மருத்துவர் பாலாஜியின் அறைக் கதவை உள்பக்கமாக தாழித்துக் கொண்ட இளைஞர், தான் கொண்டு வந்திருந்த சிறிய கத்தியை எடுத்து மருத்துவரை கழுத்து, முதுகு, தோள்பட்டை என ஏழு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். 

இதனால், வலியில் அலறிய மருத்துவர் சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் மற்றும் சக மருத்துவர்கள் மருத்துவரின் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மருத்துவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். 

உடனடியாக கத்தியால் குத்தி விட்டு சென்ற இளைஞர் சர்வ சாதாரணமாக சென்றுள்ளார்.அவரை பொதுமக்கள்  பிடித்து போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். பின் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த மருத்துவர் பாலாஜியை அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்னை காவல் தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன்,  இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, அடையாறு காவல்துறை ஆணையர் பொன் கார்த்திக் குமார் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மருத்துவரை கத்தியால் குத்திய நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கத்தியால் குத்திய நபர் பெருங்களத்தூர், காமராஜர் நகர், எம்ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்த மனோகர் என்பவரின் மகன் விக்னேஷ் (26) என்பது தெரியவந்தது. இவர் தனது தாயார் பிரேமா என்பவருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை வந்ததும் தெரியவந்தது.

இவரது தாய் பிரேமாவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்ததால் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டு 6 மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 6 முறை கீமோதெரபி செய்யப்பட்டிருப்பதும், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை என கடந்த மாதம் தனியார் மருத்துவமனைக்கு தனது தாயாரை சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வகையில் இன்று  விக்னேஷ் OP சீட் போட்டு விட்டு பின் முதல் தளத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவ துறைத்தலைவர் மருத்துவர் பாலாஜியின் அறைக்கு உள்ளே சென்றதும் அறைக்கதவை தாழிட்டு கொண்டு தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரின் கழுத்தில் இரண்டு முறையும், முதுகில் நான்கு முறையும், தோள்பட்டையில் ஒரு முறையும் என மொத்தமாக ஏழு முறை கத்தியால் குத்தியுள்ளார்.

தீபாவளிக்கு முன்பாக விக்னேஷ் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர் பாலாஜியை சந்தித்து, 'உங்களால் தான் தனது தாய்க்கு நோய் முற்றியுள்ளது' என சண்டையிட்டு சென்றதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட விக்னேஷை போலீசார் கிண்டி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவர் பாலாஜியின் உடல்நலத்தை கேட்டு அறிவதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் நேரில் வந்து மருத்துவர் பாலாஜியை நலம் விசாரித்தனர்.

சென்னை காவல்துறை ஆணையர் அருண் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். விக்னேஷ் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பிரிவினில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில் கிண்டி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சட்டவிரோதமாக தடுத்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தாக்குதல் நடத்தல், கொலை முயற்சி, குற்றம் கருதி மிரட்டல், ஆயுதங்களை பயன்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும் வகையில் காயத்தை ஏற்படுத்துதல்,  அரசு ஊழியரை  கடுமையான காயங்களை ஏற்படுத்துதல்  தமிழ்நாடு மருத்துவ சேவையில் ஈடுபடும் நபர்கள் மீது வன்முறை மற்றும் சொத்து சேதத்தினை ஏற்படுத்துதல் தடுக்கும் சட்டம் என ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது தனது தாய் தனியார் மருத்துவமனையில் கீமோ சிகிச்சை எடுப்பதற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் மருத்துவர் பாலாஜியின் தவறான சிகிச்சையே இதற்கு காரணம் எனக் கூறி அவரிடம் பணம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு தர மறுத்து பேசியதால்  விக்னேஷ் தாக்கியதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் எனக்கு என்ன வேண்டுமானாலும் தண்டனை கொடுங்கள் ஆனால், என் தாய்க்கு நல்ல சிகிச்சை வேண்டும் என போலீசார் விசாரணையில் கதிர் அழுததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து விசாரணை முடிந்த பிறகு சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர்  நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய நிலையில், , விக்னேஷ்வரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரனை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow