சுதந்திர போராட்ட தியாகி கக்கனின் சிதிலமடைந்த கக்கன் மணிமண்டபம்... அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்..!
சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தமிழக அரசியலில் எளிமையின் சிகரமாக திகழ்ந்த கக்கனின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரின் மணிமண்டபம் மற்றும் அஸ்தி வைக்கும் இடத்தை பராமரிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தமிழக அரசியலில் எளிமையின் சிகரமாக திகழ்ந்த தியாக சீலர் கக்கனின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், காமராஜரின் அமைச்சரவையை அலங்கரித்தவருமான கக்கனின் நினைவுநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது திருவுருவ சிலைக்கும் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால், அவரது நினைவாக கட்டப்பட்ட மணிமண்டபம் மற்றும் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடம், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் சிதிலமடைந்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் கடந்த 1909ம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் பூசாரிகக்கன் மற்றும் குப்பி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் கக்கன். இவர். மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்த நிலையில், 1942-ல் வெள்ளையனே வெளியேறு , ஆகஸ்ட் புரட்சி போன்ற சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு 1942 முதல் 1944 வரை 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
மேலும், 1952 நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1957 முதல் 1967 வரை தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, காவல்துறை, சிறைத்துறை, அரிசன மக்கள் நலத்துறை, அறநிலையத்துறை என 12 துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார்.
இதனைத்தொடந்து 1973ல் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றவர். அவருடைய இறுதி காலத்தில் ஏழ்மையால் நோய்வாய் பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 1981 டிசம்பர் மாதம் 23 ல் சென்னையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது நினைவாக அவர் பிறந்த ஊரான தும்பைப்பட்டியில் 2001 முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் நினைவு மணிமண்டபம் திறக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் அன்று தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த மணிமண்டபம் மற்றும் அங்குள்ள அவரது அறிய புகைப்படங்கள் போதிய பராமரிப்பு இல்லாம் சேதமடைந்து வருகின்றது.
மேலும் தியாக சீலர் கக்கன், வார்டனாக இருந்த மேலூரில் உள்ள காந்திஜி மாணவர்கள் இல்லத்தில் அவரை நினைவு படுத்தும் வகையில், அவரது அஸ்தி அடங்கிய பீடம் அமைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக போதிய பராமரிப்பு இல்லாமல், புதர்கள் நிரம்பி சிதிலமடைந்து காணப்படுகிறது.
தமிழக அரசியலில், எளிமையின் சிகரமாகவும், எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்தவருக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், மரியாதை செலுத்தும் வண்ணம். மணிமண்டபம் மற்றும் அவரது அஸ்தி உள்ள இடத்தினையும் பராமரிப்பு செய்து மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?