Medical Student Death: உச்சநீதிமன்ற வேண்டுகோளை ஏற்று மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்!
''எங்களுக்கும் மருத்துவர்கள் மீது அக்கறை உள்ளது. மருத்துவ மாணவி படுகொலையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 9ம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று அங்குள்ள பொருட்களை சூறையாடியதுடன், மருத்துவர்களையும், காவல்துறையினரையும் தாக்கியுள்ளது.
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலைக் கலைத்தனர். மேலும் மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ மாணவி படுகொலையில் அவருடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.
இது தவிர மாணவி படுகொலையை கண்டித்தும், மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
இது தவிர நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் மருத்துவ மாணவி கொலையை கண்டித்து போராட்டம் நடத்திய நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மருத்துவ மாணவி கொலை வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதிகள், ''எங்களுக்கும் மருத்துவர்கள் மீது அக்கறை உள்ளது. மருத்துவ மாணவி படுகொலையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். ஆகவே மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும். போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது அனைத்து மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உத்தரவிடுகிறோம்'' என்று வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் ''பணிக்கு திரும்பும் மருத்துவர்களின் பாதுகாப்பை அனைத்து மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்புவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் மருத்துவ சேவை சீராக நடக்கும்.
What's Your Reaction?