இந்தியா

Champai Soren: “நான் அரசியலை விட்டு விலகமாட்டேன்... விரைவில் புதிய கட்சி..” சம்பாய் சோரன் அதிரடி!

இன்னும் ஒருவாரத்தில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பேன் என ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

Champai Soren: “நான் அரசியலை விட்டு விலகமாட்டேன்... விரைவில் புதிய கட்சி..” சம்பாய் சோரன் அதிரடி!
விரைவில் புதிய கட்சி - சம்பாய் சோரன் அதிரடி

சென்னை: ஜார்க்கண்ட் அரசியலில் வலிமையான தலைவர்களில் ஒருவராக வலம் வருபவர் சம்பாய் சோரன். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான இவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதாகக் கூறி அங்கிருந்து முன்னர் விலகினார். இதனால் சில தினங்களாகவே ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவி காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வருகிறது. இதனால் விரைவில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படியான பரபரப்பான சூழலில் தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து திடீரென விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து அவர் வேறு எதாவது கட்சியில் இணையப் போகிறாரா என கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், சம்பாய் சோரன் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். முன்னதாக அவர், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேருடன் டெல்லியில் முகாமிட்டிருந்தார். மேலும் அவர் பாஜகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் சம்பாய் சோரனை கட்சியில் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி நடைபெறுகிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் இக்கூட்டணி இணைந்தே போட்டியிட முடிவு செய்துள்ளன. அதேபோல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பீகாரின் ஜேடியூ, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளன. இதன் காரணமாக தான் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய எதிர்ப்புகள் கிளம்பியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து டெல்லியில் இருந்து ஜார்க்கண்ட் திரும்பிய சம்பாய் சோரன், தனது புதிய கட்சி குறித்து அதிரடியாக அறிவித்துள்ளார்.

தனது அரசியல் வாழ்வில் இனி புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளதாகவும், நான் ஒருபோதும் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தனது ஆதரவாளர்கள் எனக்கு பக்கப் பலமாக உள்ளனர். அவர்களின் ஆதரவு கிடைத்துள்ளதால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடனான அத்தியாயம் முடிகிறது. புதிய அரசியல் கட்சித் தொடங்கவுள்ள நான், அதுபற்றி விரைவில் அறிவிப்பேன் என்றார். அதேபோல், நான் நினைத்தால் ஒரே வாரத்தில் 30 ஆயிரம் முதல் 40,000 பேர் வரை ஒன்று திரட்ட முடியும். எனவே ஒரு வாரத்திற்குள்ளாக எனது புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன் என தெரிவித்துள்ளார்.      

மேலும் படிக்க -  குரங்கம்மை தடுப்பூசி.. குட் நியூஸ் சொன்ன சீரம் இந்தியா சிஇஒ

தொடர்ந்து பேசிய அவர், புதிய கட்சியை வலுப்படுத்தவுள்ளதோடு, கூட்டணி அமைக்கவும் ரெடியாக இருக்கிறேன். ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் மக்களுக்கும் சேவை செய்யவே புதிய கட்சியை தொடங்கவுள்ளதாகவும் சம்பாய் சோரன் கூறியுள்ளார். இதனால் சம்பாய் சோரனின் புதிய கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நில மோசடி வழக்கில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஹேமந்த் சோரன். இதனையடுத்து அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்பின்னரே ஹேமந்த் சோரனின் தந்தைக்கு நெருங்கிய நண்பராக இருந்த சம்பாய் சோரன் பிப்ரவரி 2ம் தேதி முதல்வராக பதவியேற்றார். பின்னர் ஜூன் 28ம் தேதி ஹேமந்த சோரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால், மீண்டும் அவரே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனால் தான் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.