தவெக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரி மனு.. ஆறு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கினார். இவர் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாகவும், ஆளும் கட்சி மீதான விமர்சனத்தையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவாகவும், சில நேரங்களில் அறிக்கை வாயிலாக மட்டுமே தெரிவித்து வருகின்றார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநரை நேரில் சந்தித்து விஜய் மனு அளித்தார்.
தொடர்ந்து, பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சமீபத்தில் சந்தித்து உரையாற்றினார். இதையடுத்து நேற்று (பிப். 2) தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் விஜய் பனையூர் கட்சி அலுவலகத்தில் கழக கொடியேற்றி வைத்து கொள்கைத் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோவில் தெருவில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி, அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சரத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், திருவீதி அம்மன் கோவில் தெருவின் மூலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடிக்கம்பங்களால் எந்த இடையூறும் இல்லை என்றும், அந்த பகுதியில் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பித்தும், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர் என்பதால், கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சத்திய நாராயண பிரசாத், மீண்டும் இரண்டு வாரங்களில் மாநகராட்சியிடம் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். அந்த விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
What's Your Reaction?