சென்னை தி.நகரில் 43 கடைகளுக்கு 'சீல்'... மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி... என்ன காரணம்?
சென்னையில் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1% தனி வட்டியுடன் அபராதம் செலுத்த வேண்டும். அதே வேளையில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஊக்கப்பரிசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது
சென்னை: தியாகராய நகர் பகுதியில் சொத்து வரி செலுத்தாத 43 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் மாநகரின் முக்கிய வணிகப் பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இங்கு பல்லாயிரம் கோடிக்கு வியாபாரம் நடக்கும். இது மட்டுமின்றி வார இறுதி நாட்களிலும் ஏராளமான மக்கள் படையெடுத்து வருவதால் இந்த பகுதியில் விற்பனை களைகட்டும்.
இப்படி பரபரப்பு நிறைந்த தியாகராய நகர் பகுதியில் 43 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த 43 கடைகளும் ரூ.1.5 கோடி சொத்து வரி பாக்கி வைத்து இருந்தன. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் பலமுறை வலிறுத்தியும் மேற்கண்ட கடைகள் சொத்து வரியை செலுத்தவில்லை.
இதனால் தியாகராய நகர் பகுதிக்கு சென்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 43 கடைகளுக்கும் இன்று அதிரடியாக சீல் வைத்துள்ளனர். திடீரென அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்ததால் தியாகராய நகர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
தியாகராய நகர் டாக்டர் நாயர் தெருவில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள மொத்தம் 38 கடைகள் ரூ.90 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது. ரங்கநாதன் தெருவில் உள்ள சண்முகா ஸ்டோர்ஸ் மட்டும் ரூ.35 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தாததால் இந்த கடைகளுக்கு சீல் வைத்துள்ளதாக மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் சொத்து வரி வருவாய் கிடைக்கிறது. சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி என்ற அளவில் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும். இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1% தனி வட்டியுடன் சொத்து வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதே வேளையில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?