மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுக கனவு பலிக்காது.. விஜய் எதை நோக்கி பயணிக்கிறார்..? ஓ.பி.எஸ்

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Feb 3, 2025 - 14:43
 0
மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுக கனவு பலிக்காது.. விஜய் எதை நோக்கி பயணிக்கிறார்..? ஓ.பி.எஸ்
ஓ. பன்னீர் செல்வம்

பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,  பேரறிஞர் அண்ணாவின் வழியில் எதிர்வரும் சவால்களை சந்தித்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை வழங்குவோம். அதிமுக தோழர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று எங்களை எல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் நினைவிடத்தில் இருந்து உறுதி ஏற்கிறோம். அண்ணாவின் கொள்கை, கோட்பாடுகளை கடைப்பிடித்து நடந்திருந்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க: அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை-  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ என்பது குறித்து எல்லோரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதனை தீவிர புலன் விசாரணை செய்து வெளிப்படுத்த வேண்டிய நிலையிலிருந்து ஆளுங்கட்சி வெளிப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்களின் செல்போனை பறிமுதல் செய்வதும், வன்முறையும், அதிகார துஷ்பிரயோகங்களும் தீர்வாகாது.

ஈசிஆர் விவகாரத்தில் யார் குற்றவாளிகள் என விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டியது அரசின் கடமை. ஈசிஆர் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். விஜய் அரசியல் இயக்கம் தொடங்கி ஓராண்டு முடிவடைந்துள்ளது. அவர் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறார் என்பது தெளிவாக புரியவில்லை. தெளிவாக அவரது கொள்கைகளை, கோட்பாடுகளை சொன்னால் அது குறித்து கருத்துக்களை தெரிவிப்போம்.

மேலும் படிக்க: அண்ணா நினைவு தினம்:  மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி மரியாதை

அரசியல் கட்சி ஆரம்பிக்கின்ற அனைவரும் நாங்கள் தான் ஆட்சி அமைக்க போகிறோம், முதலமைச்சர் ஆக போகிறோம் என்று கூறுவார்கள். அதை தீர்மானிப்பது மக்களின் கடமை. ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow