லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் முன்னாள் அமைச்சர்.. ஊழல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை

536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Sep 19, 2024 - 07:04
Sep 19, 2024 - 07:05
 0
லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் முன்னாள் அமைச்சர்.. ஊழல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஆறு புகார்களை அளித்திருந்தார். குறிப்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

முதற்கட்ட விசாரணைக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கியதாகவும் மற்றும் ஒப்பந்ததாரர்களை தேர்ந்தெடுத்து சென்னை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

2018 ஆம் ஆண்டு மழை நீர் வடிகால் மற்றும் சாலைகளை மேம்படுத்தும் திட்டம் ஆகியவற்றில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவந்தது.

இதன் அடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன், ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர் சின்னச்சாமி, செயற்பொறியாளர், சரவணமூர்த்தி, செயற்பொறியாளர் பெரியசாமி செயற்பொறியாளர் சின்னதுரை, செயற்பொறியாளர் நச்சன், மண்டல அதிகாரியும் முன்னாள் செயற்பொறியாளருமான சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார்,, தலைமை பொறியாளர் நந்தகுமார், ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் புகழேந்தி மற்றும் இதர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2006 ஆம் ஆண்டில் இருந்து தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் நகர்ப்புற நிர்வாகம் ஊரக வளர்ச்சி அமைச்சராக இருந்துள்ளார் .2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2018 -2019 காலகட்டத்தில் சென்னை மெகா சிட்டி திட்டதில், மழைநீர் வடிகால் திட்டம் 73 பேக்கேஜிகளாக மேற்கொள்ளப்பட்டது. இந்த மழைநீர் வடிகால் திட்டத்திற்காக 290 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியது. இதேபோன்று சாலைகள் சீரமைத்தல், சரிபார்த்தல், நடைபாதை அமைத்தல் என 14 விதமான பேக்கேஜ்கள் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 19 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு 246.39 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் இது தொடர்பான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது ஒப்பந்ததாரர்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும், டெண்டர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த பிறகு அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியாக ஒப்பந்தங்களை மதிப்பீடு செய்து ஆய்வுக்கு உட்படுத்தினர்.

பொருளாதார ரீதியாகவும் ஒப்பந்தங்கள் பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறைந்த விலைக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டவர்களுடன் டென்டர்கள் குறித்து பேசப்படும். குறிப்பாக அதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். அதன் பிறகு அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்ப குழுவிடம் அனுப்பப்பட்டு தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படும்.அதன் பின்பே டெண்டர் வேலைகள் பணம் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெறும்.

இந்த டெண்டர்கள் ஒதுக்கீடு செய்வதில் அதிகாரிகள் குறிப்பாக தொழில்நுட்ப குழுவில் இடம் பெற்றவர்கள் டெண்டர் விதிகளை மீறி செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணியின் அழுத்தத்தின் காரணமாக அதிகாரிகள் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியின் பதவியை தவறாக பயன்படுத்தி அவரது நண்பரான சந்திரசேகர் அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் டெண்டர் ஒதுக்கீடை, சட்டவிரோதமாக தனக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கியது தெரியவந்துள்ளது. அந்த காலகட்டத்தில் சந்திரசேகர், கோவை அதிமுகவில் இளைஞரணி செயலாளராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் அதிகாரத்தினால் சந்திரசேகர் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு விதிகளை மீறி டெண்டர்கள் ஒதுக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் 51 டெண்டர்கள் மழை நீர் வடிகால் திட்டத்திலும், இரண்டு டெண்டர்கள் சாலைகள் சீரமைக்கும் திட்டத்திலும் முறைகேடு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், எம் சாண்ட் மணல் வகைகள் எம்15 எம்20 மற்றும் எம்30 ஆகிய எம்சாண்ட் மணல் வகைகளை அதிக விலைக்கு நிர்ணயம் செய்ததும் தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் முருகன் மற்றும் சின்னச்சாமி ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து எம் சாண்ட் மணலை ஆற்று மணலை விட அதிக விலைக்கு நிர்ணயித்தது தெரிய வந்துள்ளது. இந்த எம் சாண்ட் மணல் மூலமாக கான்கிரீட் சாலை வேலைகள் மற்றும் மழை நீர் வடிகால் திட்டங்கள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட்டன. இந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட எம் சாண்ட் மணல்களுக்கு ஆற்று மணல் அளவிலான விலைக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பணம் அதிகாரிகள் மூலம் நிரண்யிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் ஒப்பந்தங்கள் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதிலும், தொடர்புடைய நிறுவனங்களுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. உதாரணத்திற்கு மழைநீர் வடிகால் திட்டம் மற்றும் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆறு டெண்டர்கள் தாமஸ் அய்யாதுரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் மற்றும் RTI ஃபவுண்டேஷன் இந்த இரண்டு நிறுவனங்களும் தண்டரில் போட்டியிட்டது. ஆனால் தாமஸ் அய்யாதுரை என்ற நபரை இந்த இரண்டு நிறுவனங்களையும் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் 51 மழை நீர் வடிகால் டெண்டர்கள் மற்றும் இரண்டு சாலைகள் மேம்படுத்துவது தொடர்பான டெண்டர்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி முதல் 10 சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் முறைகேடு செய்து டெண்டர்களை ஒதுக்கியதையும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அப்போதைய அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணியுடன் சேர்ந்து மழை நீர் வடிகால் திட்டம் மற்றும் சாலைகள் மேம்பாடு திட்டத்தில் டெண்டர் ஒதுக்குவதிலும் அதில் பொருட்களின் விலை நிர்ணயிப்பதிலும் முறைகேடு செய்து ஒப்பந்த விதிகளை மீறி சுமார் 26.61 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு இழப்பீடு ஏற்படும் வகையில் ஊழல் செய்திருப்பது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் ஊழல் செய்திருப்பது தெரிய வந்ததை அடுத்து எஸ் பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் 10 பேர் உட்பட 11 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow