உருவானது ஃபெஞ்சல் புயல்.. டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் ஆரம்பம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறி புயலாக உருவானதாகவும், டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகுதான் மீண்டும் புயல் சின்னம் உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 340 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாளை காலை வடதமிழ்நாடு புதுச்சேரி கடற்கரையை ஒட்டி காரைக்கால் மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.
இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 02.30 மணிக்கு புயலாக உருமாறியதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த புயலானது காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை கரையை கடக்கும் எனவும், புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், டிசம்பர் 2வது வாரத்திற்க்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, ஜனவரி, பிப்ரவரி மாதம்வரை தொடர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெயரான, ஃபெஞ்சல் என சூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து குமுதம் செய்திகளுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ள தனியார் வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ், “இலங்கையின் நிலப்பரப்பு ஊடுருவல் மற்றும் பல்வேறு வானிலை காரணிகள் காரணமாக பசுபிக் உயரழுத்தம் மற்றும் அரேபிய உயரழுத்தம் போன்ற பல்வேறு வானிலை காரணிகள் இதன் தொடர்பில் இருப்பதன் காரணமாக புயல் ஒரே இடத்தில் மையம் கொண்டிருந்தது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது இலங்கை பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. அடர்த்தி மிகுந்த மேகங்கள் வடதிசையை நோக்கி நகர்வதால், சென்னையில் அவ்வப்போது தற்பொழுது மழையானது செய்து வருகிறது. இது வரக்கூடிய நேரங்களில் குறிப்பாக இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.
இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படும். இது நாளை கரையை கடக்கும் பொழுது கடலோர பகுதிகளில் 60 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும். இதன் காரணமாக தாழ்வான பகுதிகளை வசிக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
டிசம்பர் 2வது வாரத்திற்க்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, ஜனவரி, பிப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான வாய்ப்பு இந்த ஆண்டு உள்ளது” என்றார்.
What's Your Reaction?