நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு.. நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி மனு

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ஆயிரத்து 56 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்தார்.

Jan 27, 2025 - 14:39
 0
நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு.. நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி மனு
கனிமொழி-நிர்மலா சீதாராமன்-தங்கம் தென்னரசு- ககன்தீப் சிங் பேடி

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கன் தென்னரசு நேரில் சந்தித்தார். 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ஆயிரத்து 56 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி அவர் மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஆயிரத்து 56 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடந்த 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார். 

இன்று, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன் இணைந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை  புது தில்லியில் நேரில் சந்தித்து, இத்திட்டத்திற்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 13-ஆம் தேதி இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் என்பது கிராமப்புற இந்தியாவுக்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும். இது கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுத்துவது மட்டுமல்லாமல், கிராமப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது. 

இத்திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டில் ஜனவரி 6-ஆம் தேதி வரை 20 கோடி மனித உழைப்பு நாட்களாக இருந்த நிலையில், தமிழகம் ஏற்கனவே 23.36 கோடி மனித உழைப்பு நாட்களை எட்டியுள்ளது. தமிழகத்துக்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தை 20 கோடி மனித சக்தி நாட்களிலிருந்து 35 கோடி மனித சக்தி நாட்களாக உயர்த்துவதற்கான செயற்குறிப்பு ஏற்கெனவே 23.11.2024 அன்று மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

தற்போது தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீர்ந்து விட்டதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஆயிரத்து 56 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடினமாக உழைத்த தொழிலாளர்களுக்கு ஊதியத்திற்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை நிலுவையில் உள்ள ஆயிரத்து 56 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை தாம் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் 2024-2025-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்துக்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போன்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow