மகனை கட்டித் தழுவி முத்தமிட்டு வாழ்த்திய ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின்.. மனம் நெகிழ்ந்த உதயநிதி!
தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என தனது நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் அரசியலில் வலுவாக தனது கால் தடத்தைத் பதித்தார் உதயநிதி ஸ்டாலின். எய்ம்ஸ் செங்கல்லோடு அவர் செய்த பிரச்சாரம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓயாமல் சென்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு மக்களின் மனதில் நடிகர் என்ற சாயலை மறக்கடித்து தான் ஒரு அரசியல்வாதி என்பதனை ஆழமாகப் பதித்தார். 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலினின் சூராவளி பிரச்சாரம் ஒரு முக்கியப் பங்காற்றியதாக திமுகவினரிடம் பாராட்டுகளைப் பெற்றார்.
இவரது கடின உழைப்பின் காரணமாக திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திலும் முழு மூச்சுடன் செயல்பட்ட உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் எம்.எல்.ஏ. ஆனார். தனக்குக் கொடுத்தப் பொறுப்பினை கச்சிதமாக செய்த உதயநிதி ஸ்டாலின், 2022ம் ஆண்டின் இறுதியில் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து அண்மையில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். மழை வெள்ளக் காலங்களில் அவர் ஆற்றியக் களப்பணி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இன்று (நவ. 27) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்பு வேப்பேரி பெரியார் இடத்தில் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலினின் இல்லத்துக்கு சென்று தனது தாய் தந்தையான முதல்வர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினிடம் ஆசி பெற்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின், உதயநிதியை முத்தமிட்டும் கட்டித் தழுவியும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த புகைப்படங்களை தனது X தளத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், “உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் - அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டோம். எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்” என பதிவிட்டு தனது நெகிழ்ச்சியை தெரிவித்தார்.
What's Your Reaction?