நடிகை பாலியல் புகார்: சீமானுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்
நடிகை பாலியல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக 12 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 27-ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் ஆஜராகவில்லை.
அவருக்கு பதிலாக அவரின் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் ஆஜராகி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து சீமான் வீட்டில் காவல்துறயினரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த நோட்டீஸை அகற்றிய சீமான் வீட்டு காவலாளி, உதவியாளர் மற்றும் காவல்துறைக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் சீமான் காவல்நிலையத்தில் ஆஜரானார்.
இந்நிலையில், நடிகை பாலியல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு ஏற்கனவே மூன்று முறை தொடரப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு மீண்டும் தொடரப்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே 12 வாரங்களில் விசாரணை மேற்கொண்டு அறிக்கையில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “எதிர்மனுதாரர் தங்களின் தரப்பு விளக்கம் என்ன என்பதற்கு பதிலளிக்க நோட்டீஸ் வழங்கப்படும். இரு தரப்புக்கு இடையே முடிவு எட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்த பிறகே காவல்துறை சீமானை விசாரிக்க வேண்டும் . அதுவரை இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது" என தெரிவித்து மே மாதம் வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
What's Your Reaction?






