சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் நேற்று மாலை எழும்பூரில் உள்ள தனியார் திரையரங்கில் படம் பார்க்க வந்துள்ளார். அப்போது இடைவேளை நேரத்தில் திரையரங்க கேண்டீனில் குளிர்பானம் வாங்கி தனது குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அந்த குளிர்பானம் முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதை பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் குளிர்பானம் காலாவதியாகி இருப்பதாக குற்றம் சாட்டி கேண்டீன் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் குளிர்பானத்தின் பாட்டில்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பெண் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து எழும்பூர் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனியார் திரையரங்க கேண்டீன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, அப்பெண் 90 ரூபாய் மதிப்புடைய குளிர்பானம் வாங்கியதாகவும் அது காலாவதியாகவில்லை எனவும் அதில் மது வாசனை வரவில்லை எனவும் கூறியுள்ளனர்.
லிச்சி ப்ளேவர் என்பதால் அதனுடைய பிளேவர் அதுபோன்ற வாசனையை தருகிறது என்றும் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தாங்கள் தவறான பொருட்களை விற்பனை செய்திருந்தால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தாராளமாக ஆய்வு மேற்கொண்டு எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான குழு தனியார் திரையரங்க கேண்டீனில் சோதனை மேற்கொண்டனர். பெண் குற்றம் சாட்டிய குளிர்பானங்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கூல்ட்ரிங்க்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் எசென்ஸ் பாட்டில்களையும் கையில் எடுத்து அனுமதி இன்றி கூல்டிரிங்ஸ் தயாரித்தீர்களா என்ற கேள்விகளையும் எழுப்பினர்.
இதையடுத்து, உணவுப் பொருட்களை சேர்த்து வைத்திருக்கும் கிடங்கில் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அங்கு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பாப்கான்கள், தேதி குறிப்பிடாத உணவுப் பொருட்கள் ஆகியவை ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதையும், பாப்கான்களில் பூஞ்சைகள் படர்ந்து இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அப்பெண் குற்றம் சாட்டிய குறிப்பிட்ட வகை குளிர்பானங்களின் நூற்றுக்கணக்கான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் பேசியதாவது, "பிரபல திரையரங்கில் காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்கள் வைத்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இதனை அடுத்து இந்த திரையரங்கு நிர்வாகத்தில் கேண்டீன் நடத்தும் நிர்வாகத்திற்கு லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்கள் கேட்கப்பட உள்ளன.
குறிப்பாக பெண் குற்றம் சாட்டிய குளிர்பானம் தயாரிக்கும் கேரளா கண்ணூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்க உள்ளோம். சென்னை முழுவதும் இதேபோன்று திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் குறித்து அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வார்கள்” எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மக்கள் விழிப்புணர்வு அடைந்து வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிப்பதால் எந்தவித பிரச்சனையும் இன்றி சோதனை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெயில் அதிகமாக தாக்க ஆரம்பித்ததால் சுகாதாரத் துறை செயலர் உத்தரவின் அடிப்படையில் சென்னையில் பழக்கடைகள், பழச்சாறு கடைகள், கூல்ட்ரிங்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பான இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.