பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம்.. நீதிமன்றம் தீர்வு காணும் என எச்சரிக்கை
தமிழ்நாட்டில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு, ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு எதிரான வழக்குகளில் தீர்வு எட்டவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும் என தெரிவித்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றம் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததையும், அரசின் பல்வேறு திட்டம் தொடர்பான ஆணைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றுல் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது
இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி ஆஜராகி, தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்குகளை ஒரு வாரத்துக்கு பின்னர் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் கூடுதல் முன்னேற்றங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு ஆளுநர் மற்றும் அரசுக்கு இடையேயான விவகாரம் முடிவு எட்டப்பட்டுள்ளதா? அல்லது பழைய நிலையை தொடருகிறதா ? என கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
அதற்கு தமிழ்நாடு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் அபிஷேக் சிங்வி, ஆளுநர்- அரசு இடையேயான மோதல் போக்கு என்பது பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து கொண்டு வருகின்றன என்றும் இதுவரை முடிவுக்கு வரவில்லை என்று கூறியதோடு இந்த விவகாரத்தில் தற்போது துணைவேந்தர்கள் நியமன பிரச்சனையும் வந்துள்ளது என எடுத்துரைத்தனர்.
மேலும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான கூடுதல் மனுவையும் முந்தைய வழக்குகளோடு இணைத்து விசாரணைக்கு ஏற்க வேண்டும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான கூடுதல் மனு மீது புதிய நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் இந்த வழக்கில் புதிய நோட்டீஸ் பிறப்பிக்க தேவையில்லை, அதேவேளையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தனர்.
அதேபோல இந்த விவகாரங்களில் தீர்வு எட்டவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும் என தெரிவித்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினம் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
What's Your Reaction?