விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Jan 17, 2025 - 17:01
 0
விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 3-ஆம் தேதி தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த சிறுமி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை பழனிவேல் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோருக்கு எதிராக விக்கிரவாண்டி  போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்ற கோரி பலியான சிறுமியின் தந்தை பழனிவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருந்து 20 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்தும், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. 

குழந்தை கழிவு நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை. குழந்தையின் ஆடை நனையவில்லை. மாறாக, உடையில் ரத்தக்கறை  உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது என்றும் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையின் உடையில் ரத்தக்கறை குறித்து போலீஸாரிடம் தெரிவித்த  போது, உடையை திருப்பி தரும்படியும், இல்லாவிட்டால் வழக்கை முடித்து வைத்து விடுவதாக விக்கிரவாண்டி போலீஸார் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குழந்தை மரணத்தில்  பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை மாற்ற வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்  என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் எஸ். வினோத்குமார், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைக்கால உத்தரவாக சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். பதில் மனுத்தாக்கல் செய்த பிறகு அது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்த நீதிபதி மனு குறித்து தமிழ்நாடு அரசு, டிஜிபி மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow