மெரினா காமராஜர் சாலையில் பிரமாண்டமாக நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை 

குடியரசு தினவிழா ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதற்கான அணிவகுப்பு ஒத்திகை மெரினா காமராஜர் சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

Jan 24, 2025 - 09:13
 0
மெரினா காமராஜர் சாலையில் பிரமாண்டமாக நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை 
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை

இந்தியாவின் 76-வது குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரே கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணி வகுப்புகள் நடைபெறும். இதற்கான அணிவகுப்பு ஒத்திகை இன்று நடத்தப்பட்டது. குறிப்பாக ஜனவரி 20, 22, 24 ஆகிய மூன்று தினங்கள் மெரினா காமராஜர் சாலையில் ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி இன்று இறுதி ஒத்திகை நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு தொடங்கி 8.15 மணி வரை மெரினா காமராஜர் சாலையில் நடைபெற்றது.

ஆளுநர் மற்றும் முதல்வர் வருவது போல் ஒத்திகைகள் மற்றும் முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது. ஆண்டு தோறும் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை எதிரே குடியரசு தின விழா நடைபெறும்.

ஆனால், தற்போது அந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று இடமாக உழைப்பாளர் சிலை எதிரே குடியரசு தின விழா நடைபெற உள்ளது. அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு, ஒத்திகை நிறைவடையும் வரை  காமராஜர் சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படும். இந்நிகழ்ச்சியில், ராணுவ அணிவகுப்பு நடைபெறும் . இவ்விழாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அவர் நேற்று டெல்லி வந்தடைந்தார். 73 வயதான பிரபோவா சுபியாண்டோ முன்னாள் ராணுவ தளபதி ஆவார். கடந்த அக்டோபர் மாதம் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow