புத்தாண்டு விதிகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dec 31, 2024 - 17:00
 0
புத்தாண்டு விதிகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை
புத்தாண்டு விதிகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோயில்களில்  சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில், பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபடாமல் இருக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெரினா, இசிஆர் போன்ற கடற்கரைகளில் இரவு 7 மணிக்கு மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்னை காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஓட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவு வாயில்கள், நிகழ்ச்சி நடைபெறும், விருந்து நடைபெறும் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிக்காக தாற்காலிக மேடைகள் அமைக்கப்பட்டால், அந்த மேடையின் ஸ்திரத்தன்மைமையை உறுதி செய்ய பொதுப் பணித் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது. வாகனங்களை அந்தந்த ஓட்டல்களின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்த வேண்டும். சாலைகளில் எந்த காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்தக் கூடாது. 

மதுபானங்களை அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்திலேயே பரிமாற வேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்களை வழங்கக்கூடாது. காவல் துறையால் அளிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளின் போது பெண்களை கேலி செய்வதை தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும். பெண் பாதுகாவலா்களை நியமிக்க வேண்டும். வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளை மீறும் ஓட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை  எச்சரிக்கை விடுத்து ஓட்டல்களுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow