போதைப்பொருள் வழக்கில் பெண் உட்பட 8 பேர் கைது.. 17 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் போதைப்பொருளுக்கு எதிரான தனி பிரிவு தொடங்கப்பட்டு சென்னை பெருநகரில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து, போதைப் பொருட்கள் தொடர்பான குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல், போதை பொருளுக்கெதிரான நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினர் கடந்த 21-ஆம் தேதி மாதவரம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வெங்கடேசன், கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள், இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று (டிசம்பர் 30) கைது செய்யப்பட்ட வெங்கடேசனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் 15 கிலோ 900 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், ரெட்ஹில்ஸ், வடகரையில் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் வெங்கடேசன் அவருடைய உறவினரான கொடுங்கையூரைச் சேர்ந்த பிரபு மற்றும் ஊரப்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் ஆகியோருடன் இணைந்து ஹரியானா மற்றும் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு மெத்தபெட்டமைன் மற்றும் அதனை தயாரிக்கும் மூலப்பொருளான Pseudoephedrine ஆகியவற்றை கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரணையில் சென்னையை சேர்ந்த சாகுல் ஹமீத் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நேற்று (டிசம்பர் 30) கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 128 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சாகுல் ஹமீத், லாரன்ஸ் ஆகியோர் போதைப்பொருளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த லாபத்தில் வாங்கப்பட்ட இரண்டு வீட்டு சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், வெங்கடேசனுக்கு மெத்தப்பட்டமைன் வாங்கி விற்பனை செய்த குற்றத்தில் கூட்டாளியாக இருந்த அவரது மனைவி ஜான்சி மெரிடா மற்றும் சரத்குமார் ஆகியோர் நேற்று (டிசம்பர் 30) கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 157 கிராம் மெத்தப்பட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் மற்றும் முருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 150 கிராம் மெத்தபெட்டமைன் ஆய்வக உபகரணங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இதுவரை 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 17 கிலோ 815 கிராம் மெத்தபெட்டமைன், மூன்று நான்கு சக்கர வாகனங்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களிமிருந்து நான்கு வீட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுவரை கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு சுமார் 17 கோடி மற்றும் இக்குற்றத்தின் மூலம் சம்பாதித்த சொத்துக்களான வீடுகள் மற்றும் வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் 5 கோடி ஆகும். இவ்வழக்கில் மேலும் யார் யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள். போதை பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டு, யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை கண்டறியவும், வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள பிற குற்றவாளிகளை கைது செய்யவும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?