Rajinikanth: “தவெக மாநாடு மிகப் பெரிய வெற்றி..” அதுமட்டும் நோ..! விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரஜினி
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளதாக கூறியுள்ள ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை: நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதனையடுத்து அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் ரசிகர்களை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தார். பண்டிகை காலங்களில் தனது வீட்டு முன்னர் குவியும் ரசிகர்களுக்கு வாழ்த்துக் கூறுவது ரஜினியின் வழக்கம். அதேபோல், தீபாவளியை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டின் முன்னர் ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார். அப்போது அவரிடம் விஜய்யின் தவெக மாநாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ”விஜய்யின் தவெக மாநாடு நிச்சயமா மிகப்பெரிய வெற்றி தான், அவருக்கு எனது வாழ்த்துகள்” என்றார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டில் விஜய் பேசியது பற்றியும் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது உடனடியாக கையெடுத்து கும்பிடு போட்ட ரஜினிகாந்த், சிரித்துக்கொண்டே ‘நன்றி’ என சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.
சில தினங்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில், அரசியல் பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என செய்தியாளரை நோக்கி விரலை உயர்த்திப் பேசியிருந்தார் ரஜினிகாந்த். விஜய்க்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. 1996 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக திமுக கூட்டணிக்கு ஆதரவு செய்திருந்தார் ரஜினிகாந்த். அப்போது முதலே ரஜினிகாந்த் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப அவரும் “அதோ வரேன்... இதோ வரேன்..” என போக்குக் காட்டிக் கொண்டிருந்த நிலையில், கட்சியே ஆரம்பிக்காமல் அரசியலில் இருந்து ஓய்வுப் பெற்றார் ரஜினிகாந்த்.
இது ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில், விஜய் சொன்னது போல அரசியல் கட்சி ஆரம்பித்து அதன் முதல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார். இப்போது அதற்கு வாழ்த்துக் கூறினாலும், விஜய் பேசியது பற்றி கருத்துத் தெரிவிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார் ரஜினிகாந்த். இந்நிலையில், தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த வேட்டையன் திரைப்படம், நவ.8ம் தேதி ஓடிடியில் ரிலீஸாகிறது. இந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான வேட்டையன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் 8ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்-யின் தவெக மாநாடு..
மிகப்பெரிய வெற்றி மாநாடு..#Rajinikanth #vijay #tvkvijay #rajini #diwali2024 #kumudamnews24x7 pic.twitter.com/O1K4nOCvaX — KumudamNews (@kumudamNews24x7) October 31, 2024
What's Your Reaction?