Lucky Baskhar Review: கம்பேக் கொடுத்தாரா துல்கர் சல்மான்..? லக்கி பாஸ்கர் முழு விமர்சனம் இதோ!
துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் முழுமையான விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
சென்னை: மும்பையில் 1989-92 காலக்கட்டத்தில் நடக்கும் பீரியட் ஜானர் மூவி லக்கி பாஸ்கர். தனியார் வங்கியில் கேஷியராக வேலை பார்க்கும் துல்கர் சல்மானுக்கு, வெறும் 6,000 ரூபாய் தான் சம்பளம். ஆனால் 16,000 ரூபாய் கடனுடன் ஏகப்பட்ட பிரச்சினை, அவமானம், ஏமாற்றங்கள். இனி நல்லவனாக இருப்பதில் பலன் இல்லை என நினைத்து வங்கி பணத்தில் கை வைக்கிறார் துல்கர் சல்மான். அதை சிலர் உதவியுடன் சாமர்த்தியமாக இன்னும் அதிகமாக்க, ஒரு கட்டத்தில் அவரது அக்கவுண்ட்டில் 100 கோடி ரூபாய் இருப்பதை கண்டு பிடிக்கிறது சிபிஐ.
எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார், கடைசியில் சிக்கினாரா? தண்டனை அனுபவித்தாரா? அல்லது எஸ்கேப் ஆனாரா? என்பது வெங்கி அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வந்திருக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் கதை. தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி, வங்கி பின்னணியில் இப்படி ஒரு கதைகளத்தில் படம் உருவானது, விறுவிறு திரைக்கதை, திருப்பங்கள் பிளஸ். குறிப்பாக அந்த கால மும்பை பின்னணி, துல்கரின் அருமையான நடிப்பு, வங்கி, பங்கு சந்தை மோசடி விவரங்கள் படத்தை மேலும் ரசிக்க வைக்கின்றன. துல்கர் சல்மானின் மகனாக வரும் யூடியூப் புகழ் ரித்விக் நடிப்பும் அபாரம்.
ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு சீனும் கமர்சியலாக இருப்பதும். ஒவ்வொரு கேரக்டரின் தன்மையும் அருமை. துல்கர் மனைவியாக வரும் மீனாட்சி சவுத் ரியிடம் கவர்ச்சியை எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். வங்கி அலுவலர்கள், அதிகாரிகள், சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக நடித்துள்ளனர். ராம்கி சில சீன்களில் வருகிறார். ஜி.வி பிரகாஷ் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
வங்கி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சில வங்கி நடைமுறை, பங்குச்சந்தை முதலீடு, சிக்கல்கள் பற்றியதை இன்னும் எளிமையாக காட்சிப்படுத்தியிருக்கலாம். இடைவேளைக்கு பின் சற்றே தொய்வு வருவதை சரி செய்து இருக்கலாம். ஆனாலும் ஒரு தவறான கதையை, பண மோசடி விவகாரத்தை சரியாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
What's Your Reaction?