இந்த கையில பட்டம்... அந்தக் கையில மனு.... ஆளுநரையே அதிரவைத்த மாணவரால் பரபரப்பு!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கிக்கொண்டிருந்த ஆளுநரின் கையில் மாணவர் ஒருவர் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 14, 2024 - 19:28
 0
இந்த கையில பட்டம்... அந்தக் கையில மனு.... ஆளுநரையே அதிரவைத்த மாணவரால் பரபரப்பு!
ஆளுநரையே அதிரவைத்த மாணவரால் பரபரப்பு!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-ஆவது பட்டமளிப்பு விழா இன்று (அக். 14) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினர். ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும்போது ஒரு மாணவர் மட்டும் பட்டத்தை வாங்கிய பின்பு ஆளுநரிடம் மேடையில் வைத்தே மனு அளித்தார். இது ஆளுநர் மட்டுமின்றி அரங்கில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பட்டமளிப்பு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் புகார் கொடுத்தேன். பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழி நடத்தும் பேராசிரியர்கள், அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தையை பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாணவர்களை பயன்படுத்துவதாக புகாரில் குறிப்பிட்டு உள்ளேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பல்கலைக்கழக வளாகத்தில் ஆதிதிராடவிடர் வகுப்பைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளை பொது விடுதியாக பயன்படுத்துகின்றனர். ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு விடுதிகளே இல்லை எனக் கூறி, அரசு தரும் நிதியை வாங்குவதில்லை. ஆராய்ச்சி மாணாவர்களின் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்த பின்பு ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பணம் செலவழிக்க சொல்லி பேராசிரியர்கள் வற்புறுத்துகின்றனர். இது எல்லா பல்கலைக்கழகத்திலும் நடைமுறையில் இருக்கிறது. இதை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறேன்.

பல்கலைக்கழக விடுதி பராமரிப்புக்காக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். ஆனால் கம்பர் விடுதியில் கழிவறை சரியாக கட்டப்படவில்லை. சேக்கிழார் விடுதியிலும் முறையாக பராமரிப்பதில்லை என்கிறபோது ஒரு கோடி ரூபாய் எங்கே போகிறது? என்கிற கேள்வியையும் புகாரில் எழுப்பி உள்ளேன். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விளையாடுவதற்கு இரண்டு மைதானங்கள் இருந்தும், அதனை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. வார விடுமுறை நாட்களில் தனியாருக்கு இரண்டு மைதானங்களையும் வாடக்கைக்கு விடுகின்றனர். இங்கு உள்ள தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. கடந்த 5 வருடங்களாக விளையாட்டு தினம் நடத்தாமல் பணத்தை மட்டும் வசூலித்து வருகின்றனர்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow