பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!
பள்ளி கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(அக்.14) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.
அதன்படி,
12 ம் வகுப்பு செய்முறைதேர்வுகள் பிப் 7 முதல் பிப் 14 வரை நடைபெறும்.
11 ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப் 15 முதல் 21 ம் தேதி வரை நடைபெறும்.
10 ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப் 22 முதல் பிப் 28ம் தேதி வரை நடைபெறும்.
மெயின் தேர்வுகள்:
12ம் வகுப்புக்கு மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும்.
11ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும்.’
10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும்.
தேர்வு முடிவுகள்:
12ம் வகுப்பு ரிசல்ட் மே 9ம் தேதியும், 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு ரிசல்ட் மே 19ம் தேதியும் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய அவர், “பருவ மழையை பொறுத்தவரை முதல்வரும், துணை முதல்வரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மழை பாதிப்பு இருந்தால் பள்ளிகளுக்கு விடுமுறையா ? இல்லையா என்பது அனைவரின் கேள்வியாக இருக்கின்றது. மழை பாதிப்பு இருந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிடுவார்கள். பள்ளிகல்வித்துறை மீது தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன இருக்கின்றது. இந்த துறைக்காக 44042 கோடி ரூபாயினை இந்த அரசு ஒதுக்கி இருக்கிறது. அட்டவணை வெளியிட்ட பின்பு அதற்கு ஏற்ப மாணவர்கள் தயாராகிக்கொள்ள வேண்டும். பொதுத் தேர்வுகளை பதற்றம் இல்லாமல் எழுத வேண்டும்.
தமிழகத்திற்கு பள்ளிக் கல்வித்துறைக்கு SSA திட்டத்தின் கீழ் கொடுக்க வேண்டிய தொகையினை, மத்திய அரசு கொடுக்கவில்லை. பல்வேறு காரணங்களை சொல்லி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அந்த முயற்சி கைவிடப்படவில்லை. 27 வகையான நடவடிக்கைகள் SSA நிதி மூலம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுத்தப்படுவதால் இது தொடர்பான நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது. திடீரென அந்தப் பணத்தில் மத்திய அரசு கை வைக்கின்றது. மத்திய அரசின் 20 விதிமுறைகளை முறையாக பின்பற்றும் மாநிலம் தமிழகம்தான். பிற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
சிறப்பாக செயல்படும் தமிழகத்திற்கு SSA நிதி வரவிடாமல் மத்திய அரசு தடுக்கின்றது. தமிழக முதல்வர் அதிக நிதியினை பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்கின்றார். சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டு, பேராசிரியர் அன்பழகன் திட்டம் மூலம் 3500 வகுப்பறைகள் வரை கட்டப்பட்டு இருக்கின்றன. தேவைப்படும் இடங்களில் கட்டிடங்கள் கட்டப்படும். மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து படிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதே வேளையில் சிதிலமடைந்த கட்டிடத்திலும் மாணவர்கள் படிக்கக் கூடாது என உறுதியாக இருக்கின்றோம். சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழகம் இருக்கும் பொது, மும்மொழி கொள்கையினை ஏற்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?