சிறப்பு ஒலிம்பிக் போட்டி... பதக்கங்களை வென்று குவித்த தமிழக விராங்கனை!
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு மைதானத்தில் உலக அளவிலான சிறப்பு ஒலிம்பிக் (மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்காக) ஆசிய பசிபிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பேஸ்&பந்து வீச்சு போட்டியானது கடந்த நவம்பர் 19ஆம் தேதி முதல் 22 ஆம் வரை நடைபெற்றது.
இதில் 15 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் சிறப்பு பள்ளியிலிருந்து சுபாஷினி என்ற மாணவி பங்கேற்று இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.
இதையடுத்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய வீராங்கனை சுபாஷினிக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பயிற்சியாளர் ஆனந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சுபாஷினி ஏற்கனவே மாவட்ட அளவில் பேஸ்&பந்து விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தேர்வாகி இருந்தார், அதன் பிறகு மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாடி பதக்கங்களை வென்றார். அதன் அடிப்படையில் தற்போது இன்டர்நேஷனல் அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்றார். பின்னர் மூன்று பிரிவுகளிலும் மூன்று விதமான பதக்கங்களை சுபாஷினி என்று சாதனை படைத்தார்.
இந்த சாம்பியன்ஷி போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஒரு பெண் மட்டுமே கலந்து கொண்டார். அதுவும் அவர் மூன்று விதமான பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து உள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு குழந்தைகள் விளையாட்டில் நன்றாக பயிற்சி எடுத்து போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு குழந்தைகளுக்கு என தனி மைதானங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வர முடியும்” என்று கூறினார்.
What's Your Reaction?