புயல் முன்னெச்சரிக்கை.. ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை
தமிழ்நாடு போக்குவரது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் எஸ்.இ.டி.சி உள்ளிட்ட தொலைதூர பேருந்து ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பேருந்து இயக்குவது தொடர்பான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதன்படி, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூரப் பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்துடன் இயக்க வேண்டும் என்றும் தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி பயணிகள் பேருந்தை இயக்க சொன்னாலும் மாற்று வழிகளையே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்களை தூர்வார வேண்டும் என்றும் பேருந்துகளில் மழைநீர் கசிவது, சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் ஓட்டுநர் , நடந்துநர்கள் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோரச் சாலை பேருந்து ஓட்டுநர்கள் சாலையின் இடதுபுறமாகவே பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பேருந்தின் டயர்கள் சாலையின் ஓரப்பகுதி, மணல்தரைப் பகுதிக்கு சென்றுவிடாத வகையில் கவனமாக இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சாலையில் மின்கம்பிகள் , மரங்கள் விழுந்துள்ளதா என கண்காணித்தபடி கவனமாக இயக்க வேண்டும் என்றும் பேருந்தின் முகப்பு விளக்குகள், வைபர் மோட்டார் சரிவர இயங்குவதை உறுதி செய்த பின் பேருந்தை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் முன்புறம் செல்லும் வாகனத்திற்கும், பேருந்துக்கும் இடையே போதிய இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். பனிமனைகளில் உள்ள டீசல் சேமிப்பு கிடங்கில் தண்ணீர் கலக்கவில்லை என்பதை water paste போட்டு பார்த்து உறுதி செய்த பின்பே டீசல் நிரப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் (Otrs) டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்து புறப்பாடு குறித்து முன்கூட்டியே குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?