தமிழ்நாடு

மூச்சுத் திணறலால் மாணவிகள் அவதி... தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை

வாயு கசிவு காரணமாக மூடப்பட்ட தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மூச்சுத் திணறலால் மாணவிகள் அவதி... தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
வாயுக் கசிவு காரணமாக மூடப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்குவாதம்

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வாயு கசிவு ஏற்பட்டது. இதில், 35க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனையடுத்து, பள்ளி மூடப்பட்டது.

இந்த சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து, தேசிய பேரிடர் மேலாண்மை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் என பலரும் பள்ளியில் சென்று வேதியியல் ஆய்வு மையம் முதல் கழிவறை வரை பள்ளி முழுவதும் ஆய்வு செய்தனர்.

ஆனால் இன்று வரை வாயு கசிவு எப்படி ஏற்பட்டது? மாணவிகளுக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது? என்று கண்டுபிடிக்காமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் பத்து நாட்களுக்கு பிறகு பள்ளி மீண்டும் இன்று திறக்கப்பட்டது. அப்பொழுதும், பள்ளி மாணவிகளுக்கு சுவாசப் பிரச்சனை, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் சிரமம் அடைந்தனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை இட்டனர். மேலும், பள்ளிக்கு சென்ற அவர்கள், விபத்து எப்படி ஏற்பட்டது? நாங்கள் எப்படி மீண்டும் பள்ளிக்கு மாணவிகளை அனுப்ப முடியும்? விபத்துக்கான காரணம் என்ன எதுவும் சொல்லாமல் பள்ளியை மீண்டும் திறந்து உள்ளீர்கள். மீண்டும் இதுபோன்று பிரச்சனை ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று ஆசிரியரிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்திலிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்த பிறகு, பள்ளியை திறக்க வேண்டும் என்றும் அதுவரை பள்ளியை மூடிவிடுங்கள் என்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.