Senthil Balaji : மீண்டும் அமைச்சர் ஆவாரா செந்தில் பாலாஜி?.. நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..

Senthil Balaji Conditional Bail : சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Sep 26, 2024 - 16:31
Sep 26, 2024 - 18:35
 0
Senthil Balaji : மீண்டும் அமைச்சர் ஆவாரா செந்தில் பாலாஜி?.. நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு

Senthil Balaji Conditional Bail : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி (Senthi Balaji) போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை  மத்திய குற்றப்பிரிவு   காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் (Money Laundering Case) ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு(Senthil Balaji Case) தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்பதற்கு நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow